'ஒருவரை வைத்து கட்சி இயங்கவில்லை' அமைச்சர் ஜமீரை தாக்கி பேசிய சிவகுமார்
'ஒருவரை வைத்து கட்சி இயங்கவில்லை' அமைச்சர் ஜமீரை தாக்கி பேசிய சிவகுமார்
ADDED : ஏப் 01, 2026 03:58 AM

தாவணகெரே: ' 'ஒருவரை வைத்து கா ங்கிரஸ் கட்சி இயங்கவில்லை,'' என, அமைச்சர் ஜமீர் அகமது கானை, துணை முதல்வர் சிவகுமார் தாக்கி பேசியுள்ளார்.
தாவணகெரேயில் நேற்று அவர் அளித்த பேட்டி:
பாகல்கோட், தாவணகெரே தெற்கு தொகுதியில், முதல்வர் சித்தராமையா ஏற்கனவே பிரசாரம் துவக்கி விட்டார். நான் அசாம் மாநிலத்தில் இரண்டு நாள் பிரசாரத்தை முடித்து விட்டு இங்கு வந்து உள்ளேன். இங்கு இரண்டு நாட்கள் பிரசாரம் செய்வேன். பின், கேரளா, அசாமுக்கு பிரசாரத்திற்கு செல்வேன்.
தாவணகெரே தெற்கில் நிலவிய பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளோம்.
அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவர். காங்கிரஸ் அனைத்து சமூகங்களையும் ஒருங்கிணைக்கிறது. சாமனுார் சிவசங்கரப்பா அகில பாரத வீரசைவ லிங்காயத் மகாசபை தலைவராக இருந்தவர். லிங்காயத் சமூகத்திற்கு அவரது பங்களிப்பு அபாரமானது.
கொரோனா நேரத்தில் அவர் செய்த உதவிகளை, மக்கள் இன்னும் நினைவில் வைத்துள்ளனர். நான் ரகசிய சர்வே நடத்தி தான், சமர்த்துக்கு சீட் வழங்கி உள்ளேன். அவர் நிச்சயம் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.
சிவசங்கரப்பா குடும்பம் கல்வி துறையில் நிறைய சாதனை படைத்து உள்ளது. காங்கிரசுக்கு ஓட்டு போடுவதாக, 79 சதவீதம் பேர் கூறி உள்ளனர்.
ஐந்து வாக்குறுதி திட்டங்களும் எங்களுக்கு பிளஸ் பாயின்டாக இருக்கும். அமைச்சர் ஜமீர் அகமது கான், கேரளாவில் பிரசாரம் செய்கிறார். அவர் இங்கு பிரசாரம் செய்ய வரவில்லை என்றால் சிக்கல் ஏற்படும் என்று, சிலர் கூறுகின்றனர்.
ஜமீர் ஒருவரை வைத்தோ, தனி நபர்களை வைத்தோ காங்கிரஸ் கட்சி இயங்கவில்லை. சித்தாந்தம், தொண்டர்கள் மூலம் இயங்குகிறது. சிறுபான்மையினருக்கு நாங்கள் ஆற்றிய பங்களிப்பை, பா.ஜ., விமர்சிக்கிறது. சிறுபான்மை மக்களை பாதுகாப்பது எங்கள் கடமை.
இதனை மனதில் வைத்தே, தாவணகெரேயை சேர்ந்த ஜப்பாரை மூன்று முறை எம்.எல்.சி., ஆக்கி உள்ளோம். ஷிகாவி தொகுதியில், யாசிர் அகமது கான் பதானுக்கு சீட் கொடுத்து வெற்றி பெற வைத்தோம். வாரிய தலைவர் பதவிகளில் முஸ்லிம்கள், 16 பேர் உள்ளனர்.
இவ்வாறு கூறினார்.
