/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வாழ்வை வளமாக்கிய நெற்பயிர் தோரணம்
/
வாழ்வை வளமாக்கிய நெற்பயிர் தோரணம்
ADDED : மார் 15, 2026 05:32 AM

வீட்டு வாசலில் நெற்பயிர் தோரணம் கட்டுவது, பண்டைய காலத்தில் இருந்தே பின்பற்றப்படும் சம்பிரதாயமாகும். நெற் பயிர் தோரணம் கட்டினால், நன்மைகள் நடக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. இந்த தோரணம் கட்டும் கலை, ஒரு குடும்பத்தை வளமாக வாழ வைத்துள்ளது.
இன்றைய நவீன யுகத்தில், வீட்டு வாசலில் பல விதமான அலங்கார தோரணங்கள் கட்டப்படுகின்றன. பண்டிகை நாட்களில், மாவிலை தோரணங்கள் கட்டுவர். நெற்பயிர் தோரணம் தயாரிக்கும் கலைஞர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. நெற் பயிர் தோரணங்கள் தயாரிப்பதில், சிக்கமகளூரின் வெங்கடேஷ் குடும்பத்தினர் கைதேர்ந்தவர்கள்.
சிக்கமகளூரு மாவட்டம், சிருங்கேரி தாலுகா, வித்யாரண்யபுரா கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது குடும்பத்தினர் பல தலைமுறைகளாக, நெற் பயிர் தோரணம் தயாரிக்கின்றனர். இதை அர்ப்பணிப்புடன் செய்வதால், நல்ல லாபம் சம்பாதிக்கின்றனர்.
பிளாஸ்டிக் தோரணங்கள் உட்பட, பல விதமான தோரணங்கள் விற்கப்படுகின்றன. ஆனால், நெற்பயிர் தோரணம் மிகவும் பாரம்பரியமானது. வீட்டுக்கு அழகு தருவது மட்டுமின்றி, தீய சக்திகளை விரட்டும் தன்மை கொண்டது என்பது ஐதீகம். கிராமப்புற வீடுகளில் இத்தகைய தோரணங்கள் கட்டப்படுகின்றன. சிருங்கேரி மட்டுமின்றி, சிக்கமகளூரு மாவட்டம் முழுதும், வெங்கடேஷ் குடும்பத்தினர் தோரணங்களை சப்ளை செய்கின்றனர்.
இதுகுறித்து, வெங்கடேஷ் கூறியதாவது:
நெற்பயிர் தோரணம், எங்கள் குடும்பத்தை வளமாக வாழ வைக்கிறது. கிராமங்களில் விவசாயிகளிடம் நெல் வாங்கி வந்து எங்கள் வீட்டில் வைத்து தோரணம் தயாரிக்கிறோம். எங்களுக்கு முக்கியமான வேலையே இதுதான். நானும், என் குடும்பத்தினரும் சேர்ந்து தோரணங்களை தயாரித்து விற்பனை செய்கிறோம்.
ஒரு தோரணம் தயாரிக்க, 200 ரூபாய் செலவாகிறது. நாங்கள், 250 முதல் 300 ரூபாய்க்கு விற்கிறோம். ஒரு தோரணத்தில் இருந்து, எங்களுக்கு, 50 முதல் 100 ரூபாய் வரை லாபம் கிடைக்கிறது. தினமும் 3,000 முதல் 4,000 ரூபாய் வரை சம்பாதிக்கிறோம்.
அரசு சார்பில் நடக்கும் மேளாக்களில், நாங்களும் பங்கேற்கிறோம். அதிகமான நெற்பயிர் தோரணங்கள் விற்பனையாகின்றன. சமீபத்தில் சிக்கமகளூரின், அஜாத் பார்க் அருகே சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மேளா நடந்தது. அதில், எங்களுக்கும் கடைவைக்க, வாய்ப்பு கிடைத்தது. பலரும் ஆர்வத்துடன் நெற் பயிர் தோரணம் வாங்கினர்.
நாங்கள் நெற் பயிர் தோரணம் மட்டுமின்றி, மரத்தினாலான திருஷ்டி கணபதி, சிருங்கேரி சாரதா விக்ரங்கள், சாவி செயின் உட்பட, பல்வேறு கைவினை பொருட்களை தயாரித்து, விற்பனை செய்கிறோம். தினமும், 15 முதல் 20 தோரணங்களை தயாரிக்கிறோம். சிருங்கேரி தாலுகா மட்டுமின்றி, சிக்கமகளூரு மாவட்டம் முழுதும், நாங்களே தோரணம் சப்ளை செய்கிறோம்.
வீடுகளில் வாஸ்து தோஷம் இருந்தால், நெல் தோரணம் கட்ட வேண்டும். இதனால், தோஷங்கள் நீங்கும். வீட்டில் நன்மைகள் நடக்கும் என்பது, மக்களின் பலமான நம்பிக்கை. எனவே எங்களிடம் தோரணம் வாங்குகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

