/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
18 நாட்களில் ஏர்போர்ட்டில் சிக்கிய போதை பொருள் மதிப்பு... ரூ . 16 கோடி!
/
18 நாட்களில் ஏர்போர்ட்டில் சிக்கிய போதை பொருள் மதிப்பு... ரூ . 16 கோடி!
18 நாட்களில் ஏர்போர்ட்டில் சிக்கிய போதை பொருள் மதிப்பு... ரூ . 16 கோடி!
18 நாட்களில் ஏர்போர்ட்டில் சிக்கிய போதை பொருள் மதிப்பு... ரூ . 16 கோடி!
ADDED : நவ 19, 2025 08:17 AM

வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் மூலம், பெங்களூருக்கு தங்கம், போதை பொருள் கடத்துவது சமீபகாலமாக அதிகரித்து உள்ளது. சுங்க அதிகாரிகள் கண்கொத்தி பாம்பாக செயல்பட்டு, கடத்தல் தங்கம், போதை பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், சுங்க துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இம்மாதம் 1ம் தேதி முதல் 17ம் தேதி வரை, வெளிநாடுகளில் இருந்து பெங்களூருக்கு விமானங்களில் கடத்தி வரப்பட்ட 38.64 கிலோ ஹைட்ரோ கஞ்சா, 2,442 இ - சிகரெட்டுகள், எட்டு வனவிலங்குகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இதன் மதிப்பு, 14.22 கோடி ரூபாய் ஆகும். கடத்தலில் ஈடுபட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாங்காக்கில் இருந்து நேற்று பெங்களூரு வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட 1.34 கோடி ரூபாய் மதிப்பிலான 3.83 கிலோ ஹைட்ரோ கஞ்சாவை, சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஒரு பயணி கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு விமான நிலையத்தில் மட்டும், 18 நாட்களில் மொத்தம், 15.56 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது ஒருபுறம் இருக்க, பெங்களூரு நகரில் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட 21 பேரை, சி.சி.பி., போலீசார் கைது செய்துள்ளனர்.
நைஜீரிய பெண் இதுகுறித்து போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங் நேற்று அளித்த பேட்டி:
சுத்தகுண்டேபாளையா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வாடகை வீட்டில் வசிக்கும், நைஜீரிய பெண் ஒருவர் போதை பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின்படி, சி.சி.பி., போலீசார், அந்த பெண்ணின் வீட்டில் சோதனை நடத்தினர். 1.52 கோடி ரூபாய் மதிப்பிலான 760 கிராம் எம்.டி.எம்.ஏ., கிரிஸ்டல் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த பெண் கைது செய்யப்பட்டார்.
இதுபோல கே.ஆர்.புரம் பி.நாராயணபுராவில் வீட்டை வாடகைக்கு எடுத்து கஞ்சா விற்ற, பெங்களூரின் 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான 600 கிராம் ஹைட்ரோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
அலங்கார நிபுணர் கம்மஹள்ளியில் வசிக்கும் கென்யா நாட்டு பெண்ணும், போதை பொருள் விற்றதாக கைதானார். அவரிடம் இருந்து 4.08 கோடி ரூபாய் மதிப்பிலான 2 கிலோ 44 கிராம் எம்.டி.எம்.ஏ., கிரிஸ்டலை, சி.சி.பி., போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைதான பெண் சுற்றுலா விசாவில் பெங்களூரு வந்து, சிகை அலங்கார நிபுணராக வேலை செய்தார். எளிதில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் நைஜீரியா, தான்சானியா நாட்டை சேர்ந்த இருவரிடம் இருந்து போதை பொருள் வாங்கி விற்றது தெரிந்தது.
ஹெப்பகோடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் நைஜீரியா, கென்யா, தான்சானியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 12 பேர், பெங்களூரில் சட்டவிரோதமாக தங்கி, போதை பொருள் விற்றது தெரிந்தது.
ஆர்.எம்.சி., யார்டு, ஜாலஹள்ளி பகுதியில் கஞ்சா விற்ற இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான 47 கிராம் எம்.டி.எம்.ஏ., மற்றும் 515 கிராம் கஞ்சா பறிமுதல் ஆனது.
சாக்லேட் கே.ஜி.நகரில் உள்ள தபால் நிலையத்திற்கு, தாய்லாந்து, பிரான்ஸ் நாடுகளில் இருந்து சாக்லேட் வடிவில் வந்த பார்சல்களில் இருந்து 1.50 கோடி ரூபாய் மதிப்பிலான ஹைட்ரோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சாவை ஆர்டர் செய்தவர்களை தேடி வருகிறோம்.
ஒட்டுமொத்தமாக கஞ்சா, எம்.டி.எம்.ஏ., விற்ற வெளிநாட்டினர் 14 பேர் உட்பட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மொத்தத்தில் 2 கிலோ 846 கிராம் எம்.டி.எம்.ஏ., கிரிஸ்டல், 2 கிலோ 669 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மொத்த மதிப்பு, 7.80 கோடி ரூபாய்.
இவ்வாறு அவர் கூறினார்.

