ADDED : மார் 15, 2026 05:24 AM
ராம்நகர்: பெங்களூரு தெற்கு மாவட்டம் மாகடி தாலுகாவில், பல இடங்களில் நடந்த திருட்டு சம்பவங்களில் தொடர்புடையவர், மாலா, 38. கடந்த, 16 ஆண்டுகளாக போலீசாரிடம் சிக்காமல், ஆட்டம் காட்டி வந்தார்.
சமீபத்தில் மாகடியில், சாலையில் நடந்து சென்ற பெண்ணின் கவனத்தை திசை திருப்பிய மாலா, அப்பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கச்செயினை பறித்து சென்றார். இதுதொடர்பாக, மாகடி போலீஸ் நிலையத்தில், அந்தப் பெண் புகார் அளித்தார்.
போலீசாரும் பல கோணங்களில் விசாரணை நடத்தி, மாலாவை கண்டுபிடித்து கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கூடுதல் விசாரணைக்காக, காவலில் எடுத்த னர். மருத்துவ பரிசோதனைக்காக ராம்நகர் மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவமனையில் தங்க வைத்திருந்தனர். பாதுகாப்புக்கு போலீசார் நியமிக்கப்பட்டு இருந்தனர்.
நேற்று முன் தினம் நள்ளிரவு, போலீசாரின் கவனத்தை திசை திருப்பிய மாலா, மருத்துவமனையில் இருந்து தப்பியோடி விட்டார். போலீசார் மருத்துவமனை சுற்றுப்பகுதிகளில் தேடியும் தென்படவில்லை. அவரை தொடர்ந்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
