/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஆசை காட்டி மோசடி முயற்சி தென்காசியின் 3 பேர் கைது
/
ஆசை காட்டி மோசடி முயற்சி தென்காசியின் 3 பேர் கைது
ADDED : அக் 18, 2025 11:13 PM

ஜெயநகர்: மூன்று லட்சம் ரூபாய் கொடுத்தால், 10 லட்சம் ரூபாய் தருவதாக கூறி, கட்டுக்கட்டுகளாக வெள்ளை தாள்களை கொடுத்து மோசடி செய்ய முயன்ற, தமிழகத்தின் செங்கோட்டையை சேர்ந்த, மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு, ஜெயநகர் பகுதியில் வசிக்கும், ஒரு தொழிலதிபரை தொடர்பு கொண்ட கும்பல், 'நீங்கள் 3 லட்சம் ரூபாய் கொடுத்தால், அதற்கு பதிலாக நாங்கள் 10 லட்சம் ரூபாய் தருகிறோம்' என்று ஆசை வார்த்தை கூறினர்.
இதுகுறித்து அந்த தொழிலதிபர், ஜெயநகர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். தன்னை தொடர்பு கொண்டவர்கள், தங்கி இருக்கும் லாட்ஜ் பற்றியும் கூறினார்.
இன்ஸ்பெக்டர் தீபக் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் லாட்ஜிற்கு சென்று, அறையில் இருந்த, மூன்று பேரை பிடித்தனர்.
அங்கிருந்த சூட்கேசை திறந்து பார்த்தபோது 500 ரூபாய் நோட்டுகள் 31 இருந்தன. ரூபாய் கட்டுகள் என்று கூறப்பட்டவற்றில், வெள்ளை தாள்களாக இருந்தன.
மூன்று பேரிடம் விசாரித்தபோது, அவர்கள் தமிழகத்தின் தென்காசி மாவட்டம், செங்கோட்டை செர்வி கார்டன் புது தெருவை சேர்ந்த ராஜேஸ்வரன், 43, கீழப்பிள்ளை வாசன் தெருவின் ஷேக் முகமது, 40, மீரான் மொய்தீன், 37, என்பது தெரிந்தது.
இவர்கள் 3 பேரும், தொழிலதிபர்களை தொடர்பு கொண்டு, ஆசை வார்த்த கூறி, 'கள்ளநோட்டுகள் தான் தயாரித்துக் கொடுப்போம்; யாராலும் கண்டுபிடிக்க முடியாது' என்று கூறுவர். இதை நம்பி பணம் கொடுப்பவர்களுக்கு, கட்டுகட்டாக ரூபாய் நோட்டுகளை கொடுத்து, அதற்குள் வெள்ளை தாள்களை வைத்து மோசடி செய்ததும் தெரிய வந்தது.
இந்த மோசடியை பெரும்பாலும் ஆந்திராவில் அரங்கேற்றி உள்ளனர். பெங்களூரில் முதன்முறையாக மோசடி செய்ய வலை விரித்தபோதே சிக்கியதும், போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இவர்களிடம் இருந்து 15,500 ரூபாய் ரொக்கம்; 7.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான கார் பறிமுதல் செய்யப்பட்டது.
இவர்கள் கொடுத்த தகவலின்படி அவர்களின் கூட்டாளிகளான தென்காசியை சேர்ந்த யாசர், ஹக்கீம், இப்ராஹிம், தங்கம் ஆகிய நான்கு பேர் மீதும் வழக்குப்பதிவாகி உள்ளது. அவர்களை போலீசார் தேடுகின்றனர்.