/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
புலிகள், பசுவின் உறுப்புகள் ஆய்வுக்கு அனுப்பி வைப்பு
/
புலிகள், பசுவின் உறுப்புகள் ஆய்வுக்கு அனுப்பி வைப்பு
புலிகள், பசுவின் உறுப்புகள் ஆய்வுக்கு அனுப்பி வைப்பு
புலிகள், பசுவின் உறுப்புகள் ஆய்வுக்கு அனுப்பி வைப்பு
ADDED : ஜூன் 27, 2025 11:19 PM
சாம்ராஜ் நகர்: சாம்ராஜ்நகர் மலை மஹாதேஸ்வரா வன விலங்குகள் சரணாலயத்தில் மூன்று குட்டிகளுடன் தாய் புலி இறந்த சம்பவத்தில் புலிகள் மற்றும் பசுவின் உறுப்புகள் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
சாம்ராஜ் நகர் மலை மஹாதேஸ்வரா வன விலங்கு சரணாலயத்தில், மூன்று நாட்களுக்கு முன்பு மூன்று குட்டிகளுடன் தாய் புலியும் இறந்து கிடந்தன. மாநிலம் முழுதும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக, குழு அமைத்து, விசாரணை நடத்தி மூன்று நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே உத்தரவிட்டிருந்தார்.
மாநில முதன்மை தலைமை வன அதிகாரி ரவி தலைமையில் ஆறு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில் இடம் பெற்றுள்ள சாம்ராஜ் நகர் சர்க்கிள் வன அதிகாரி ஹீராலால் நேற்று கூறியதாவது:
இறந்த தாய் புலிக்கு 8 வயது; மூன்று குட்டிகளுக்கு 10 மாதம் என்பது தெரிய வந்துள்ளது. புலிகள் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் இருந்து சிறிது துாரத்தில், ஒரு பசுவின் சடலமும் கண்டுபிடிக்கப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில், பசுவின் சடலத்தின் மீது பூச்சிகொல்லி மருந்து தெளிக்கப்பட்டிருப்பது, முதற்கட்ட தடயவியல் ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆய்வக ஆய்வில் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. புலிகளின் உடல்களும், பசுவின் உடலும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. சில பாகங்கள், தடயவியல் அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இறந்த பசுவின் உரிமையாளர் குறித்து அப்பகுதியில் உள்ளவர்களிடம் விசாரித்து வருகிறோம். சம்பவ இடத்துக்கு மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
மலை மஹாதேஸ்வரா வனவிலங்கு சரணாலயம், காவிரி வன விலங்கு சரணாலயத்தில் உள்ள பெரும்பாலான குடும்பங்களின் முக்கிய தொழில், பால் பண்ணை தான். பசுக்களை மேய்ச்சலுக்கு வனப்பகுதியில் விட்டு விடுவர். இந்நேரத்தில் வன விலங்குகளின் தாக்குதலுக்கு, கால்நடைகள் பலியாகும் சம்பவங்களும் நடந்துள்ளன.
இதற்கிடையில், 'புலிகள் இறந்த பகுதியை, வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே, பார்வையிட்டு, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவார்' என, அமைச்சரின் தனி செயலர் தெரிவித்துள்ளார்.