/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஏரிகளை மேம்படுத்தி சுற்றுலா ரூ.400 கோடி வருவாய் இலக்கு
/
ஏரிகளை மேம்படுத்தி சுற்றுலா ரூ.400 கோடி வருவாய் இலக்கு
ஏரிகளை மேம்படுத்தி சுற்றுலா ரூ.400 கோடி வருவாய் இலக்கு
ஏரிகளை மேம்படுத்தி சுற்றுலா ரூ.400 கோடி வருவாய் இலக்கு
ADDED : அக் 11, 2025 11:01 PM
பெங்களூரு: நலிவடைந்து வரும் ஏரிகளை மேம்படுத்த, சிறிய நீர்ப்பாசனத்துறை முடிவு செய்துள்ளது. ஏரிகளை மேம்படுத்துவதுடன், இவற்றின் மூலம் அடுத்த 10 ஆண்டுகளில் 400 கோடி ரூபாய் வருவாய் சம்பாதிக்க திட்டம் வகுத்துள்ளது.
இதுகுறித்து சிறிய நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
கர்நாடகாவில் 41,875 ஏரிகள் உள்ளன. கிராம வளர்ச்சி, பஞ்சாயத்துராஜ் துறை நிர்வகிப்பில் 32,068 ஏரிகளும், மற்ற துறைகளின் கட்டுப்பாட்டில் 9,000 க்கும் மேற்பட்ட ஏரிகளும், சிறிய நீர்ப்பாசனத்துறை கட்டுப்பாட்டில் 3,778 ஏரிகளும் உள்ளன. இவற்றை மேம்படுத்த சிறிய நீர்ப்பாசனத்துறை முடிவு செய்துள்ளது.
ஏரிகளை நிர்வகிப்பதுடன், துறைக்கு வருவாய் கிடைக்கும் வகையில் திட்டம் வகுக்கப்படுகிறது. முதற் கட்டமாக 39 ஏரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றின் மூலமாக அடுத்த 10 ஆண்டுகளில் 340 கோடி ரூபாய் முதல் 400 கோடி ரூபாய் வரை வருவாய் சம்பாதிக்க, இலக்கு நிர்ணயித்துள்ளது.
இத்திட்டத்துக்கு பெங்களூரு, மைசூரு, தார்வாட், துமகூரு மாவட்டங்களின் 15 ஏரிகள், சித்ரதுர்கா, பல்லாரி, கொப்பால், கோலார் மாவட்டங்களின், கிராமப்புறத்தின் 24 ஏரிகள் தேர்வு செய்யப்படும்.
நகர்ப்புற ஏரிகளில் இருந்து ஆண்டுக்கு 1.70 கோடி ரூபாய் முதல் இரண்டு கோடி ரூபாய் வரையும், கிராமங்களின் ஏரிகளில் இருந்து தலா 35 லட்சம் ரூபாய் முதல் 45 லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.
நகர்ப்புற ஏரிகளில் போட்டிங் நடத்துவது, திறந்த வெளி அரங்கம் கட்டி வாடகைக்கு விடப்படும். கபே அமைக்க, வியாபாரம் செய்ய, விளம்பரம் போர்டுகள் பொருத்த, வாகனங்கள் பார்க்கிங் செய்ய அனுமதியளித்து, கட்டணம் வசூலிக்கப்படும்.
அதே போன்று கிராமப்புற ஏரிகளில் போட்டிங், மீன் பிடிக்க, வியாபரம் செய்ய அனுமதியளித்து வருவாய் பெறப்படும்.
ஏரிகளை சீரமைக்க, கார்ப்பரேட் சமூக பொறுப்பு நிதி பயன்படுத்தப்படும். ஏரிகளை மேம்படுத்தும் பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்படும். மேம்பாட்டு திட்டங்களை சிறிய நீர்ப்பாசனதுறையே வகுக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.