பெங்களூரு சிட்டி நிலையத்தில் தீயில் சேதமான ரயில் பெட்டி
பெங்களூரு சிட்டி நிலையத்தில் தீயில் சேதமான ரயில் பெட்டி
ADDED : செப் 08, 2026 03:54 AM

பெங்களூரு: பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்தின் யார்டு பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த, ரயில் பெட்டி தீ விபத்தில் சேதமானது.
பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்தின், ரயில்களை பராமரிக்கும் பகுதியில் உள்ள தண்டவாளத்தில், பயன்பாட்டில் இல்லாத ஒரு ரயில் பெட்டி, சில ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில், அந்த ரயில் பெட்டியில் இருந்து புகை கிளம்பியது. சிறிது நேரத்தில் தீ பிடித்து மளமளவென பரவி, பெட்டி முழுதும் எரிந்தது.
தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் அங்கு சென்று, ரயில் பெட்டியில் பிடித்த தீயை அணைத்தனர். ஆனாலும் பெட்டி முழுதும் சேதம் அடைந்தது. முதற்கட்ட விசாரணையில் மின்கசிவால் தீ விபத்து நடந்தது தெரிந்துள்ளது. பயன்பாட்டில் இல்லாத ரயில் பெட்டி என்பதால், அதன் அருகில் யாரும் செல்லாத காரணத்தால், அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை.
'இந்த தீ விபத்தால் மற்ற ரயில்கள் சேவைக்கு எந்த பாதிப்பும் இல்லை' என்று, தென்மேற்கு ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி பிரானேஷ் கூறினார்.
