கூடுதல் நிர்வாக மொழியாக துளு பா.ஜ., - எம்.பி., பிரிஜேஷ் வரவேற்பு
கூடுதல் நிர்வாக மொழியாக துளு பா.ஜ., - எம்.பி., பிரிஜேஷ் வரவேற்பு
ADDED : செப் 19, 2026 11:31 PM

மங்களூரு: ''கூடுதல் நிர்வாக மொழியாக துளு அறிவிக்கப்பட்டது வெறும் அறிவிப்புடன் நின்று விடக்கூடாது,'' என, தட்சிண கன்னடா பா.ஜ., - எம்.பி., பிரிஜேஷ் சவுதா கூறி உள்ளார்.
நேற்று அவர் அளித்த பேட்டி:
கர்நாடகாவின் இரண்டாவது கூடுதல் நிர்வாக மொழியாக துளுவுக்கு ஒப்புதல் வழங்கியது வரவேற்கத்தக்கது. இருப்பினும், இந்த அறிவிப்புகள் வெறும் விளம்பர உத்திகளாக இருக்கக்கூடாது. ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிச்சயம் நிறைவேற்றப்பட வேண்டும்.
கடலோர மாவட்டங்களில் உள்ள பிரச்னைகள் குறித்து முதல்வர் சிவகுமாரிடம் பா.ஜ., மாவட்ட தலைவர்கள் எடுத்துரைத்தனர். அமைச்சரவை கூட்டத்தில் ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இந்த திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்பட வேண்டும். வெறும் அறிவிப்புடன் நின்று விடக்கூடாது.
மாநிலத்தின் நிதி நிலைமை மோசமடைந்து உள்ளது. எந்தவொரு திட்டத்திற்கும், முறையாக நிதி ஒதுக்கப்படுவதில்லை. திட்டத்தை செயல்படுத்துவதற்கு, எங்கிருந்து நிதி கிடைக்கும் என்பது கேள்விக்குறியே.
இருப்பினும், அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் எப்படியாவது நிறைவேற்றப்பட வேண்டும். வெற்று விளம்பரம் செய்வதில் மாநில அரசு ஆர்வம் காண்பிக்கக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
