ஏ.டி.எம்.,மில் கள்ளநோட்டு ‘டிபாசிட்’ செய்த இருவர் கைது
ஏ.டி.எம்.,மில் கள்ளநோட்டு ‘டிபாசிட்’ செய்த இருவர் கைது
UPDATED : நவ 27, 2026 12:00 AM
ADDED : நவ 26, 2026 08:42 PM
ஹாவேரி: திரைப்படங்களில் பயன்படுத்தும் கள்ள ரூபாய் நோட்டுகளை, தேசிய வங்கி ஏ.டி.எம்., இயந்திரம் மூலமாக, புழக்கத்தில் விட முயற்சித்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
ஹாவேரி மாவட்டம், ராணிபென்னுார் நகரில் தேசிய வங்கியின் ஏ.டி.எம்., உள்ளது. நேற்று முன் தினம் இங்கு வந்த இரண்டு பேர், திரைப்பட படப்பிடிப்புகளுக்கு பயன்படுத்தும், போலி, 500 ரூபாய் மதிப்பு கள்ள நோட்டுகளை, ஏ.டி.எம்., இயந்திரத்தில் செலுத்தினர்.
இயந்திரத்தில் கள்ள நோட்டுகள் விழுந்தவுடன், இதில் உள்ள தொழில்நுட்பம் வழியாக, வங்கி ஊழியருக்கு எச்சரிக்கை தகவல் வந்தது. உஷாரான அவர், தாமதிக்காமல் ராணி பென்னுார் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.
போலீசாரும், வங்கி ஊழியர்களுடன் ஏ.டி.எம்., மையத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். இயந்திரத்தில் 500 ரூபாய் மதிப்பிலான, 76 கள்ள நோட்டுகள் போடப்பட்டிருப்பது தெரிந்தது.
அதன்பின் போலீசார், அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். ராணி பென்னுார் தாலுகாவின் மெட்லேரி கிராமத்தில் வசிக்கும் சுரேஷ், 35, என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்த, 500 ரூபாய் மதிப்பிலான 1,000 கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.
அவரிடம் விசாரித்த போது, மாலதேஷ் மைலாரா, 35, தனக்கு வழங்கியதாக தெரிவித்தார். மாலதேசை கைது செய்தபோது, அவரிடம் இருந்து 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இந்த நோட்டுகள் எங்கு அச்சிடப்பட்டன என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
