விவசாய பம்ப் செட் கேபிளை திருடிய இருவருக்கு அடி உதை
விவசாய பம்ப் செட் கேபிளை திருடிய இருவருக்கு அடி உதை
ADDED : மார் 18, 2026 06:17 AM

துமகூரு: விவசாய பம்ப் செட் கேபிள்களை திருடிய இருவரை பிடித்து கட்டிப்போட்டு தாக்கியதுடன், அவர்களை போலீசிலும் விவசாயிகள் ஒப்படைத்தனர்.
துமகூரு மாவட்டம் குனிகல் தாலுகா குன்டய்யனபாளையா கிராமத்தில், விவசாயி ஒருவருக்கு சொந்தமான நிலத்தில், நேற்று பம்ப் செட் கேபிளை இருவர் திருடிக் கொண்டிருந்தனர். இதைப்பார்த்த கிராமத்தினர், அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். திருடர்கள் இருவரையும், மரத்தில் கட்டிப்போட்டு அடித்தனர்.
இதுதொடர்பாக, ஹுலியூர் துர்கா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த அவர்கள், இருவரிடமும் விசாரித்த போது, மாகடியை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் என்பது தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச பம்ப் செட்டுகளுடன் கேபிள் பொருத்தப்பட்டிருக்கும். விவசாயிகளுக்கு முக்கியமானதாக கருதப்படும் இந்த கேபிள் திருடப்பட்டால், மீண்டும் வாங்க ஆயிரக்கணக்கான ரூபாய் தேவைப்படும். கேபிளின் விலை நிலவரம் அறிந்தே, இதை அவர்கள் திருடி உள்ளனர்.
