ADDED : ஆக 06, 2026 11:36 PM
எலஹங்கா: எலஹங்கா போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட ஜக்கூரில் கிருஷ்ணா ரெஸ்டாரென்ட் அருகில் நேற்று காலை சிலர் நடைபயிற்சி மேற்கொண்டனர். அப்போது ஒரே மரத்தில், இரு பெண்கள் துாக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்ததை பார்த்தனர்.
இது தொடர்பாக எலஹங்கா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த அவர்கள், உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், இறந்தவர்கள் நேபாளத்தை சேர்ந்த ஸ்ரீஜனா, 22, ரீதா, 23, என்பது தெரிய வந்துள்ளது. இருவரும் வேலை தேடி ஒரு மாதத்துக்கு முன், பெங்களூரு வந்துள்ளனர்.
ஒருவர் பிரேசர் டவுனிலும், மற்றொரு ஜக்கூரிலும் தங்கியிருந்தனர். வறுமையின் காரணமாக கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளனர்.
வெவ்வேறு இடங்களில் வசிக்கும் இருவருக்கும் எப்படி நட்பு ஏற்பட்டது; இருவரும் ஒரே மரத்தில் எப்படி துாக்கில் தொங்கினர் என்பது உட்பட பல கோணங்களில் போலீசார் விசாரிக்கின்ற னர்.
