/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கடலில் படகு கவிழ்ந்து இரண்டு பேர் உயிரிழப்பு
/
கடலில் படகு கவிழ்ந்து இரண்டு பேர் உயிரிழப்பு
ADDED : ஜன 27, 2026 04:54 AM
உடுப்பி: கடலில் சுற்றுலா பயணியர் சென்ற படகு, அலைகளில் சிக்கி கவிழ்ந்ததில் இருவர் உயிரிழந்தனர். பலர் கவலைக்கிடமாக சிகிச்சை பெறுகின்றனர்.
மைசூரு நகரின் சரஸ்வதி புரத்தில் வசிக்கும் பலர், பி.பி.ஓ., கால்சென்டரில் பணியாற்றுகின்றனர். இவர்களில், 28 ஊழியர்கள், உடுப்பிக்கு சுற்றுலா வந்திருந்தனர்; சொகுசு விடுதியில் தங்கியிருந்தனர்.
நேற்று காலையில் அனைவரும் மல்பேவின், கோடிபெங்ரே அருகில் உள்ள டெல்டா கடற்கரைக்கு சென்றனர். இரண்டு படகுகளில் தலா, 14 பேர் வீதம் சவாரி புறப்பட்டனர்.
மிகவும் அபாயமான பகுதியான அளிவேபாகிலு பகுதிக்கு செல்லும் போது, ஒரு படகு அலைகளின் ஆர்ப்பரிப்பில் சிக்கி தள்ளாடி கவிழ்ந்தது. சுற்றுலா பயணியர் நீரில் விழுந்தனர். படகு மூழ்குவதை கவனித்த அப்பகுதியினரும், மீனவர்களும் மற்றொரு படகில் சென்று, நீரில் விழுந்தவர்களை காப்பாற்றி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
ஆனாலும், சிகிச்சை பலனின்றி, சங்கரப்பா, 22, சிந்து, 23, என்ற இருவர் உயிரிழந்தனர். தர்மராஜ் மற்றும் திஷா என்ற இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
சுற்றுலா பயணியரை படகில் சவாரி அழைத்து செல்லும் போது, சரியான பாதுகாப்பு வசதிகளை செய்யாததே, அசம்பாவிதத்துக்கு முக்கிய காரணமாகும். படகை செலுத்திய ஊழியரும், சில சுற்றுலா பயணியரும், 'லைப் ஜாக்கெட்' அணிந்திருக்கவில்லை. அது மட்டுமின்றி கடலில் செல்லும் போது, முன்னெச்சரிக்கையாக இல்லாமல், சிலர் படகில் ஆட்டம் போட்டதாலும், அசம்பாவிதம் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து, மல்பே போலீசார் விசாரிக்கின்றனர். பாதுகாப்பு சாதனங்கள் இல்லாமல், சுற்றுலா பயணியரை அழைத்து சென்ற, படகு ஆப்பரேட்டர்கள் மீது வழக்கு பதிவாகியுள்ளது.

