/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கஞ்சா விற்பனை வழக்கு இருவருக்கு '10 ஆண்டு'
/
கஞ்சா விற்பனை வழக்கு இருவருக்கு '10 ஆண்டு'
ADDED : செப் 18, 2025 11:11 PM
பெங்களூரு: ஆந்திராவில் இருந்து, கஞ்சா கொண்டு வந்து விற்க முயற்சித்த வழக்கில், இருவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து, என்.டி.பி.எஸ்., எனும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை தடை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பெங்களூரு, சுத்தகுன்டேபாளையாவின், கே.இ.பி., பூங்கா அருகில், 2021 ஏப்ரல் 12ம் தேதி மதியம், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக சென்ற காரை, தடுத்து நிறுத்தி சோதனையிட்ட போது, 114 கிலோ கஞ்சா இருப்பதை கண்டுபிடித்தனர்.
காருடன், கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இதை கடத்தி வந்த சீலம் நாகவெங்கட சாயிசரண், 29, ஜெகந்நாதன் விகாஸ் மிஸ்ரா, 30, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் முறையே ஆந்திராவின், ஸ்ரீகாகுளம், விஜயவாடாவை சேர்ந்தவர்கள். ஆந்திராவில் இருந்து, குறைந்த விலைக்கு கஞ்சா வாங்கி, பெங்களூருக்கு கொண்டு வந்து, அதிக விலைக்கு விற்றது விசாரணையில் தெரிந்தது.
கைதான இருவரும், பல முறை ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தும், அவர்களுக்கு ஜாமின் கிடைக்கவில்லை. விசாரணையை முடித்த போலீசார், என்.டி.பி.எஸ்., சிறப்பு நீதிமன்றத்தில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
நீதிமன்ற விசாரணையில் சீலம் நாகவெங்கட சாயிசரண், ஜெகந்நாதன் விகாஸ் மிஸ்ராவின் குற்றம் உறுதியானது. இருவருக்கும் 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி லதா, நேற்று முன் தினம் தீர்ப்பளித்தார்.
அரசு தரப்பில் வாதிட்ட வக்கீல் அஸ்வத் நாராயணா கூறியதாவது:
குற்றவாளிகள் இருவரும், ஆந்திராவில் இருந்து கஞ்சாவை, பெங்களூருக்கு கடத்தி வந்து விற்க முயற்சித்தனர். இவர்கள் கைதான பின், அரசு தரப்பில் வலுவான சாட்சிகள் சேகரிக்கப்பட்டன. ஏழு பேர் நீதிமன்றத்துக்கு வந்து சாட்சியம் அளித்தனர். இது குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க உதவியாக இருந்தது.
நீதிமன்றத்தின் தண்டனை, போதைப்பொருள் விற்போருக்கு நல்ல பாடமாக அமைந்துள்ளது. இரு குற்றவாளிகள் கைதான நாளில் இருந்து, சிறையில் அடைபட்டுள்ளனர். ஜாமின் கிடைக்கவே இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.