என் வாழ்க்கை திறந்த புத்தகம் சொல்கிறார் மத்திய அமைச்சர் குமாரசாமி
என் வாழ்க்கை திறந்த புத்தகம் சொல்கிறார் மத்திய அமைச்சர் குமாரசாமி
ADDED : ஜூன் 17, 2026 10:15 PM

பெங்களூரு: என் வாழ்க்கை திறந்த புத்தகம் என சொல்கிறார் மத்திய அமைச்சர் குமாரசாமி.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
பிடதி டவுன்ஷிப் விவகாரத்தில் என் குடும்பத்திற்கு எதிராக, பிடதி பகுதியில் சுவரொட்டி ஒட்டப்பட்டு உள்ளது. சுவரொட்டியில் உள்ள என் மகன் நிகில் புகைப்படத்தில், 100 ஏக்கர் நிலம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளனர்.
என்னிடம் இருப்பது, 46 ஏக்கர் நிலம் மட்டுமே. அதையும், 40 ஆண்டுகளுக்கு முன் கஷ்டப்பட்டு சம்பாதித்து வாங்கினேன். என்னிடம், 100 ஏக்கர் நிலம் எங்கு உள்ளது என்று காட்டட்டும்.
உதவியற்றவர்களின் கடைசி ஆயுதம் பிரசாரம் தான். அதை தான் முதல்வர் சிவகுமார் செய்து கொண்டு இருக்கிறார்.
தனிப்பட்ட முறையில் என் மீது அவதுாறு பரப்புவதை அவர் கைவிட வேண்டும். மிரட்டினால் பின்வாங்கும் நபர் நான் இல்லை.
இறந்தவரின் பெருவிரலில் மையை அழுத்தி, நிலத்தை அபகரித்தவர் தான் சிவகுமார். அவருக்கு அப்படி ஒரு மோசமான வரலாறு உண்டு. அவரை பற்றி எத்தனையோ போஸ்டர்கள் ஒட்டலாம்.
என் தகுதி என்ன, அந்த நபரின் தகுதி என்ன என்று மக்களுக்கு நன்கு தெரியும். முதல்வராக இருப்பவருக்கு ஒரு தரம் வேண்டும். தரம் இல்லாத ஒருவரால் மாநிலம் எந்த திசையில் செல்லும் என்று, மாநில மக்கள் சிந்திக்க வேண்டும்.
என் வாழ்க்கை திறந்த புத்தகம். என்னை பற்றி மக்களுக்கு நன்கு தெரியும்.
மக்களுக்காகவும், விவசாயிகளுக்காகவும் என் போராட்டம் தொடரும். நான் முதல்வராக இருந்த போது, பிடதியில் டவுன்ஷிப் அமைக்க நினைத்தது உண்மை தான். மக்கள் எதிர்ப்பால் திட்டத்தை கைவிட்டேன்.
அவர்கள் என் பெயரை பயன்படுத்தி நிலத்தை கொள்ளையடிக்க பார்க்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
