பயன்பாட்டில் இல்லாத ரயில் பெட்டியில் தீ: போதையில் சிகரெட் துண்டு வீசியவர் கைது
பயன்பாட்டில் இல்லாத ரயில் பெட்டியில் தீ: போதையில் சிகரெட் துண்டு வீசியவர் கைது
ADDED : செப் 12, 2026 04:31 AM

பெங்களூரு: பெங்களூரு சிட்டி ரயில் நிலைய த்தில், பயன்பாட்டில் இல்லாத ரயில் பெட்டியில் தீப்பிடித்த வழக்கில், போதையில் சிகரெட் துண்டை வீசியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்தின் யார்டு பகுதியில், பயன்பாட்டில் இல்லாத ரயில் பெட்டியில், கடந்த 6ம் தேதி இரவு தீப்பிடித்தது. இதுகுறித்து ரயில்வே போலீசார் விசாரித்தனர்.
கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது, தீப்பிடித்த பெட்டியில் இருந்து ஒருவர் இறங்கி சென்றது தெரிந்தது.
அந்த நபரை உப்பார்பேட் பகுதியில், நேற்று முன்தினம் ரயில்வே போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவரது பெயர் ரவி கோரக் திர்வா, 37, என்பது தெரிந்தது.
மஹாராஷ்டிராவை சேர்ந்த பெயின்டரான இவர், பெங்களூரில் வேலை செய்தார். வீடு இல்லாததால் இரவில் நடைபாதை, சமுதாய நலக்கூடத்தில் துாங்கி வந்தார்.
கடந்த 6ம் தேதி இரவு ரயில் நிலைய யார்டு பகுதிக்கு வந்த அவர், பயன்பாட்டில் இல்லாத ரயிலில் ஏறி அமர்ந்திருந்தார். கஞ்சா போதையில் இருந்த அவர், சிகரெட் புகைத்தார். சிகரெட்டின் தீ, அணைவதற்குள் துாக்கி வீசினார்.
தீ, ரயில் பெட்டியில் பிடித்ததால் விபத்து ஏற்பட்டது. அதிர்ச்சி அடைந்த அவர், ரயில் பெட்டியில் இருந்து, இறங்கி தப்பி சென்றது தெரியவந்தது.
