ADDED : ஆக 20, 2026 04:04 AM

பெங்களூரு: ''வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேடு வழக்கில், 79.68 கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கம், சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன,'' என, துணை முதல்வர் பரமேஸ்வர் சட்டசபையில் அறிவித்தார்.
முன்னாள் அமைச்சர் நாகேஷ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பின், சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது. மதியம் மீண்டும் துவங்கிய போது, வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேடு வழக்கிற்கு பொறுப்பேற்று அமைச்சர் நாகேந்திரா ராஜினாமா செய்ய வேண்டும் என்று, எதிர்க்கட்சியினர் கோஷம் எழுப்பினர்.
உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே எழுந்து, 'ஆக்ரோஷமாக பேசினார். அதற்கு எதிர்க்கட்சியினர் ஆட்சேபனை தெரிவித்து கோஷம் எழுப்பினர். பதிலுக்கு ஆளுங்கட்சியினரும் கோஷம் எழுப்பியதால், சபையில் கடும் கூச்சல், குழப்பம் நிலவியது.
இதற்கு மத்தியில் துணை முதல்வர் பரமேஸ்வர் பேசியதாவது:
திட்டம் மற்றும் புள்ளியியல் துறை அமைச்சர் நாகேந்திரா மீது எதிர்க்கட்சியினர் ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன்வைத்து சபையில் சுமூக செயல்பாட்டிற்கு தடையாக உள்ளனர். கூட்டத்தொடர் மக்கள் வரிப்பணத்தில் நடக்கிறது. அரசியல் காரணங்களுக்காக இடைஞ்சல் செய்யாதீர்கள். சபையின் மாண்பை குலைக்காதீர்கள்.
வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேடு வழக்கில், ஆணையம், வங்கி அதிகாரிகள் சதி திட்டம் தீட்டி 84.63 கோடி ரூபாயை முறைகேடு செய்தனர். எந்த நீதிமன்றமும் நாகேந்திராவை குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கவில்லை. அமலாக்கத்துறை, சி.பி.ஐ., தான் நாகேந்திரா பெயரை குற்றப்பத்திரிகையில் சேர்த்துள்ளது.
அரசு அமைத்த சிறப்பு புலனாய்வு குழு அறிக்கையில் நாகேந்திரா பெயர் இல்லை. தவறு செய்த அதிகாரிகள் பெயர்கள் தான் உள்ளது. மொத்தம் 84.63 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது.
இதில், 16 கோடியே 83 லட்சத்து 35,000 ரூபாய் ரொக்கம்; 16 கிராம் தங்க கட்டிகள், 'லம்போர்கினி, பென்ஸ், கிரெட்டா, இன் னோவா ஹைகிராஸ்' கார்கள் என 79.68 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.
