விவசாயியை கொன்ற புலி சிக்கியதால் கிராமத்தினர் நிம்மதி
விவசாயியை கொன்ற புலி சிக்கியதால் கிராமத்தினர் நிம்மதி
ADDED : செப் 26, 2026 11:10 PM

சாம்ராஜ்நகர்: விவசாயியை கொன்று, கிராமத்தினரை அச்சுறுத்திய புலி, வனத்துறையினரிடம் சிக்கியதால், மக்கள் நிம்மதி அடைந்தனர்.
சாம்ராஜ்நகரின் பலகலபுரா கிராமத்தில் வசித்தவர் விவசாயி பசவண்ணா. செப்டம்பர் 14ம் தேதி மாலை, வயலில் வேலை செய்யும் போது, புலி அவரை அடித்து கொன்றது. புலியின் நடமாட்டத்தால், சுற்றுப்புற கிராமத்தினர் கிலி அடைந்தனர்.
தகவலறிந்து அங்கு வந்த வனத்துறையினர், புலியை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். தொடர்ந்து 12 நாட்களாக, ட்ரோன் கேமரா, மோப்ப நாய் உதவியுடன் புலியை தேடியும், கண்டுபிடிக்க முடியவில்லை.
இதற்கிடையே, நேற்று முன்தினம், தாவரகட்டே கிராமத்தின் சுற்றுப்பகுதிகளில், புலி நடமாட்டம் தெரிந்தது. இதை பிடிப்பதற்காக, துபாரே யானைகள் முகாமில் இருந்து, ஈஸ்வர், கஞ்சன் யானைகள் அழைத்து வரப்பட்டன.
இரண்டு ட்ரோன் கேமராக்கள், யானைகள், மலைவாழ் மக்கள், வனத்துறையினர் என, பலரும் புலியை தேடினர். நேற்று காலை தாவரகட்டே கிராமத்தின், மரகதகெரே அருகில் கண்டுபிடித்தனர். இந்த ஏழு வயது ஆண் புலியை, மயக்க மருந்து ஊசி செலுத்தி பிடித்து, கூண்டில் அடைத்தனர். தங்களை அச்சுறுத்திய புலி சிக்கியதால், கிராமத்தினர் நிம்மதி அடைந்தனர்.
