/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கைகளை இழந்தாலும் நீச்சலில் சாதித்த விஸ்வாஸ்
/
கைகளை இழந்தாலும் நீச்சலில் சாதித்த விஸ்வாஸ்
ADDED : ஜூலை 24, 2025 11:28 PM

மின்சாரம் தாக்கியதில் தந்தையையும், இரு கைகளையும் இழந்த 35 வயது நபர், நீச்சல் போட்டியில் பல பதக்கங்களை பெற்று, நாட்டிற்கு பெருமை சேர்த்து உள்ளார்.
'கடினமாக உழை, வெற்றி சாகாது' என்பதே விஸ்வாசின் தாரகமந்திரம். கோலாரை சேர்ந்தவர் கே.எஸ்.விஸ்வாஸ், 35. பாரா ஒலிம்பிக் போட்டியில், நாட்டுக்காக பல பதக்கங்களை பெற்று பெருமை சேர்த்து உள்ளார்.
பேரதிர்ச்சி தனது கடினமான வெற்றிப்பாதை குறித்து அவர் கூறியதாவது:
கோலார் மாவட்டத்தில் பிறந்தேன். என் தந்தை சத்ய நாராயண மூர்த்தி, வேளாண் துறையில் கிளார்க்காக பணியாற்றி வந்தார். எங்களுக்காக கோலாரில் வீடு கட்டி வந்தார். ஒரு நாள், கட்டப்பட்டு வந்த புதிய வீடு கட்டடத்திற்கு தண்ணீர் பாய்ச்ச மாடிக்கு சென்றேன்.
தண்ணீர் பாய்ச்சும் போது, எதிர்பாராத விதமாக, மேலே இருந்த மின்சார ஒயர் மீது கை பட்டு மின்சாரம் பாய்ந்தது. என்னை காப்பாற்ற, என் தந்தை முற்பட்டார். ஆனால், அவர் உயிரிழந்தார்.
நான், இரண்டு மாதங்கள் கோமாவில் இருந்து மீண்ட போது, என் இரு கைகளும் ஆப்பரேஷன் செய்து எடுக்கப்பட்டது தெரிந்தது. அப்போது எனக்கு பத்து வயது. இந்த வேளையில் நாங்கள் பெங்களூருக்கு குடிபெயர்ந்தோம்.
பல போராட்டங்களுக்கு இடையில், பெங்களூரில் என் பட்டப்படிப்பை முடித்தேன். மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலை கிடைக்கும் என்று பலரும் கூறினர். ஆனால், வேலை கிடைப்பது அவ்வளவு எளிதல்ல என்பதை உணர்ந்தேன்.
மன அழுத்தம் அரசு வேலைக்காக, நான் தட்டாத கதவுகளே இல்லை. இரு கைகளும் இல்லாத எனக்கு வேலை கொடுக்க அரசோ, தனியார் நிறுவனங்களோ முன்வரவில்லை.
சில ஆண்டுகளில் என் தாயாரும் உயிரிழந்தார். யாரும் இல்லாத ஆதரவற்றவனானேன். இதனால் மன அழுத்தத்துக்கு ஆளானேன். மீண்டும் சகஜ நிலைக்கு திரும்ப, பல வாரங்களானது. அடுத்து என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை.
மீண்டும் மன அழுத்தத்துக்கு ஆளாகக்கூடாது என்பதை உணர்ந்து எனது பழக்க வழக்கத்தை மாற்றினேன். நீச்சல் கற்க முடிவு செய்தேன்.
எனது நண்பர்கள் என்னை ஊக்கப்படுத்தினர். அதுமட்டுமின்றி, குங்க்பூ எனும் தற்காப்பு கலை, நடன வகுப்புக்கும் அழைத்து சென்றனர்.
அப்போது, 'அஸ்தா' மற்றும் 'புக் ஏ ஸ்மைல்' என்ற மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு சாரா அமைப்புகள் உதவின. நீச்சல், நடனம், தற்காப்பு கலைகளில் தேர்ச்சி பெற்றேன். இப்போது, தினமும் பயிற்சி பெற்று வருகிறேன்.
தன்னை அர்ப்பணித்து எனக்கு வாழ்க்கை கொடுத்தவர் என் தந்தை. 2015 முதல் பல்வேறு உள்நாடு, வெளிநாடுகளில் நடந்த நீச்சல் போட்டியில் 20க்கும் மேற்பட்ட பதக்கங்கள் பெற்றுள்ளேன்.
2016ல் கனடாவில் நடந்த ஸ்பீடோ கேன் அம் பாரா நீச்சல் போட்டியில் இரண்டு வெள்ளி, ஒரு வெண்கல பதக்கம்; 2017 மற்றும் 2018ல் ஐ.டி.எம்., பெர்லின் பாரா நீச்சல் ஜெர்மன் ஓபன் போட்டியில் வெண்கல பதக்கம் பெற்றேன்.
'சூர்வீர் விருது' அதன் பின், உதய்ப்பூரில் நடந்த தேசிய அளவிலான பாரா நீச்சல் போட்டியில் ஒரு தங்கம், இரண்டு வெள்ளி பதக்கங்கள், பெங்களூரில் நடந்த இந்தியன் ஓபன் நீச்சல் போட்டியில் ஐந்து தங்கப்பதக்கங்கள் பெற்றேன்.
அமெரிக்காவின் சிறப்பு கோல்டன் சாதனையாளர் விருது, 2018ல் முன்னாள் ஜனாதிபதி வெங்ககையா நாயுடுவிடம் 'தேசிய முன்மாதிரி விருது'; மாநில அரசின் கெம்பே கவுடா விருது, விஸ்வேஸ்வரய்யா ரத்னா விருது; மும்பையின் ஆம்பில் மிஷனின் 'சூர்வீர் விருது' உட்பட பல விருதுகள் பெற்றுள்ளேன்.
கண்ணியம், தன்னம்பிக்கை, பொருளாதார ரீதியில் சுதந்திரமாக வாழ நினைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பெங்களூரில் தன் மனைவி லட்சுமி, மகள் பிரஷஸ்தியுடன் வசித்து வருகிறார்.
- நமது நிருபர் -