ஏரிகளில் கழிவுநீரை விட்டால் நடவடிக்கை என எச்சரிக்கை
ஏரிகளில் கழிவுநீரை விட்டால் நடவடிக்கை என எச்சரிக்கை
UPDATED : அக் 02, 2026 12:00 AM
ADDED : அக் 01, 2026 07:44 PM

பெங்களூரு: ஏரிகளை அசுத்தமாக்கும் தொழிற்சாலைகள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும், என, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி எச்சரித்தார்.
கர்நாடக மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் சிவண்ணா மற்றும் உயர் அதிகாரிகளுடன், சந்தாபுரா, ராமகிருஷ்ணாபுரா, ஹென்னாகரா, ஹீலலிகே, முத்தாநல்லுாரு ஏரிகளை, அமைச்சர் ராமலிங்கரெட்டி நேற்று ஆய்வு செய்தார்.
பின், அவர் அளித்த பேட்டி:
பெங்களூரு ரூரல் மாவட்டம், ஆனேக்கல் தாலுகாவின் ஏரிகளில் தொழிற்சாலைகளின் விஷத்தன்மை கொண்ட, ரசாயன கழிவுநீர், சுத்திகரிக்கப்படாத கழிவு நீரை பாய்ச்சுவதாக, தொடர்ந்து புகார்கள் வந்தன. எனவே ஏரிகளை நேரில் ஆய்வு செய்ய வந்தேன்.
எலக்ட்ரானிக் சிட்டி, ஜிகனி, பொம்மசந்திரா தொழிற்பகுதிகளின் கழிவுநீர் மற்றும் சுற்றுப்பகுதி குடியிருப்புகளின் சாக்கடை நீர் ஏரிகளில் பாய்வதால், ஏரிகளின் நீர் அசுத்தமடைவதுடன், சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுகள், சுற்றுச்சூழல் துறையின் விதிமுறைகளை கடுமையாக செயல்படுத்த வேண்டும்.
சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை, ஏரிகள், மழை நீர் கால்வாய்களில் பாய்ச்சும் தொழிற்சாலைகள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் கட்டும் பணிகளை, விரைவில் முடிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
எலக்ட்ரானிக் சிட்டி, பொம்மசந்திரா, ஜிகனி, அத்திப்பள்ளி, பகுதிகளின் கழிவுநீர் வெளியேறும் இடங்களை கண்காணிக்க, கர்நாடக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் குழுக்கள் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
