'பட்டு உற்பத்தியில் நம் நாட்டை முதலிடத்துக்கு முன்னேற்றணும்'
'பட்டு உற்பத்தியில் நம் நாட்டை முதலிடத்துக்கு முன்னேற்றணும்'
ADDED : ஆக 26, 2026 11:04 PM

சித்ரதுர்கா: ''பட்டு உற்பத்தியில் சீனா முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளன. இந்தியாவில் பட்டு உற்பத்தியில் கர்நாடகா முதலிடத்தில் உள்ளது. கடினமாக உழைத்தால், இந்தியாவை முதல் இடத்துக்கு கொண்டு வரலாம்,'' என, பா.ஜ., - எம்.பி., கோவிந்த் கார்ஜோள் தெரிவித்தார்.
சித்ரதுர்கா நகரின், பட்டுத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில், மத்திய பட்டு ஆணையம், நேற்று நடந்த, 'எனது பட்டு எனது பெருமை' என்ற பெயரில் நடந்த கலந்துரையாடலில், எம்.பி., கோவிந்த் கார்ஜோள் பங்கேற்றார்.
அவர் பேசியதாவது:
சித்ரதுர்காவின் மாரகட்டாவில், இதுவரை செயல்பட்டு வந்த பட்டு ஆராய்ச்சி மையம், தரம் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த, 1982ல் துவக்கப்பட்ட இம்மையம், சித்ரதுர்கா, பல்லாரி, தாவணகெரே மாவட்டங்களின், பட்டு விவசாயிகளின் தேவைகளை நிறைவேற்றுகிறது.
பெங்களூரின், சர்ஜாபுரா அருகில் இருந்த கொடதியில் இருந்த, மண்டல பட்டு ஆராய்ச்சி மையத்தை, சித்ரதுர்காவின், மாரகட்டாவுக்கு இடம் மாற்றி, தரம் உயர்த்தப்பட்டது. பல்வேறு மாவட்டங்களிலும், இத்தகைய மையங்கள் செயல்படுகின்றன.
விவசாயி பயிரிடாவிட்டால், நமக்கு உணவு கிடைக்காது. மானத்தை மறைக்க உடையும் கிடைக்காது.
நமது முன்னோர்கள், நமக்காக விட்டு சென்ற நிலத்தை, ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு விற்காமல், அதை பலப்படுத்தி, 140 கோடி மக்களுக்கு உணவளிக்க தயாராக்க வேண்டும்.
பட்டு உற்பத்தியில் சீனா முதலிடம், இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளன. இந்தியாவில் பட்டு உற்பத்தியில் கர்நாடகா முதல் இடத்தில் உள்ளது. கடினமாக உழைத்தால், இந்தியாவை முதல் இடத்துக்கு கொண்டு வரலாம், இதற்காக விஞ்ஞானிகளும், விவசாயிகளும் ஆர்வம் காட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
