/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தர்மஸ்தலா வழக்கில் அடுத்த கட்டம் என்ன? எஸ்.ஐ.டி., அதிகாரிகள் குழு ஆலோசனை
/
தர்மஸ்தலா வழக்கில் அடுத்த கட்டம் என்ன? எஸ்.ஐ.டி., அதிகாரிகள் குழு ஆலோசனை
தர்மஸ்தலா வழக்கில் அடுத்த கட்டம் என்ன? எஸ்.ஐ.டி., அதிகாரிகள் குழு ஆலோசனை
தர்மஸ்தலா வழக்கில் அடுத்த கட்டம் என்ன? எஸ்.ஐ.டி., அதிகாரிகள் குழு ஆலோசனை
ADDED : ஆக 20, 2025 11:51 PM

பெங்களூரு : தர்மஸ்தலா விவகாரத்தில், அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக எஸ்.ஐ.டி., அதிகாரிகள் குழு நேற்று ஆலோசனை நடத்தியது.
தர்மஸ்தலாவில் பள்ளம் தோண்டும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ள நிலையில், பெல்தங்கடியில் உள்ள எஸ்.ஐ.டி., அலுவலகத்தில், எஸ்.ஐ.டி., தலைவர் பிரணவ் மொஹந்தி நேற்று, சக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
வழக்கு விசாரணையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது பற்றியும், புகார்தாரரிடம் விசாரணையை தீவிரப்படுத்துவது குறித்தும் ஆலோசித்தனர்.
தர்மஸ்தலாவில் உடல்களை புதைத்ததை பார்த்ததாக புரந்தர் கவுடா, துகந்தர் கவுடா என இருவர் புகார் செய்து உள்ளனர்.
இதுதவிர சமூக ஆர்வலர் ஜெயந்த் என்பவரும், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன், பள்ளி சிறுமியின் உடல் புதைக்கப்பட்டதில் சந்தேகம் உள்ளதாக கூறி உள்ளார். இவர்களை அழைத்து சென்று, உடல்கள் புதைக்கப்பட்ட இடங்களை அடையாளம் காட்டலாமா, வேண்டாமா என்பது குறித்தும் ஆலோசனை நடந்து உள்ளது.
ஒரே மாதிரி 7 பேர்
தர்மஸ்தலா சென்ற மகள் அனன்யா பட் காணாமல் போனது பற்றி, பெல்தங்கடி போலீஸ் நிலையத்தில் அவரது தாய் என்று கூறப்படும் சுஜாதா பட் புகார் அளித்தார்.
தனது மகள் என்று கூறி, ஒரு பெண்ணின் புகைப்படத்தையும் வெளியிட்டார். ஆனால் அந்த புகைப்படம் வசந்தி என்பவருடையது என்று தெரிய வந்துள்ளது.
இதுபற்றி சுஜாதா பட் கூறுகையில், ''மகளை இழந்த வேதனையில் உள்ளேன். யார் என்ன பேசினாலும் எனக்கு கவலை இல்லை.
உலகில் ஒரே மாதிரியாக 7 பேர் இருப்பர் என்று கூறுவர். எனது மகள் அனன்யா பட் போன்று வசந்தியும் இருந்து இருக்கலாம்,'' என்றார்.
நிலத்திற்காக பொய் புகார்? சுஜாதாவின் பின்புலம் குறித்து எஸ்.ஐ.டி., அதிகாரிகள் விசாரித்த போது, சுஜாதா உடுப்பியின் கார்கலாவை சேர்ந்தவர்.
கடந்த 1993ல் பெற்றோருடன் சண்டை போட்டு வீட்டில் இருந்து வெளியேறியவர்.
சிக்கமகளூரு, ஷிவமொக்காவில் வசித்ததும், கடந்த 1999 முதல் ரிப்பன்பேட்டின் பிரபாகர் என்பவருடன், 'லிவிங் டு கெதர்' வாழ்க்கை வாழ்ந்ததும் தெரிய வந்துள்ளது.
உடுப்பி மணிப்பால் மருத்துவமனை அருகே, தர்மஸ்தலா ஆயுர்வேத சிகிச்சை மையம் உள்ளது. இந்த சிகிச்சை அமையம் அமைந்து உள்ள 2.50 ஏக்கர் நிலம், சுஜாதாவின் சித்தப்பாவுக்கு சொந்தமானது.
கடந்த 1997ல் நிலத்தை, தர்மஸ்தலா அறக்கட்டளைக்கு தானமாக எழுதி கொடுத்து உள்ளார்.
கடந்த ஆண்டு சுஜாதா பட், தர்மஸ்தலா அறக்கட்டளை நிர்வாகிகளை சந்தித்து, சித்தப்பா தானமாக கொடுத்த நிலத்தை எனது பெயருக்கு எழுதி கொடுங்கள் என்று கேட்டு உள்ளார்.
சட்டப்படி எழுதி இருப்பதால் எதுவும் செய்ய முடியாது என்று, தர்மஸ்தலா அறக்கட்டளையினர் கூறி உள்ளனர்.
இதுகுறித்து ஒரு கும்பலிடம் சுஜாதா கூறி இருக்கிறார். அந்த கும்பல் கூறியபடி, தர்மஸ்தலா சென்ற மகளை காணவில்லை என்று, போலீசில் புகார் அளித்தாரா என்றும் சந்தேகம் எழுந்து உள்ளது.
100 உடல்கள் இல்லை தர்மஸ்தலா வழக்கு குறித்து புகார் அளித்தவருடன், வேலை செய்த அவரது நண்பரான மாண்டியாவின் ராஜு கூறுகையில், ''தர்மஸ்தலா வழக்கில் புகார் அளித்தது, யார் என்று எனக்கு தெரியும். ஆனால், அவரது பெயரை என்னால் கூற முடியாது. என்னிடமும், எஸ்.ஐ.டி., அதிகாரிகள் விசாரித்தனர்.
''புகார் அளித்துள்ள நபரும், நானும் தர்மஸ்தலாவில் வேலை செய்த போது, பக்கத்து அறைகளில் வசித்தோம். அவர் கூறுவது போல 100 உடல்களை புதைக்கவில்லை. தர்மஸ்தலாவில் தற்கொலை செய்த ஒரு பெண், ஒரு ஆண் உடல்களை புதைத்தோம். யாராவது பணத்தாசை காட்டி, புகார்தாரரை பொய் பேச வைத்து இருக்கலாம்,'' என்றார்.

