/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தங்கவயலில் 20 ஆண்டாக முடங்கி கிடக்கும் பஸ் நிலையம்; பயணியர் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது எப்போது?
/
தங்கவயலில் 20 ஆண்டாக முடங்கி கிடக்கும் பஸ் நிலையம்; பயணியர் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது எப்போது?
தங்கவயலில் 20 ஆண்டாக முடங்கி கிடக்கும் பஸ் நிலையம்; பயணியர் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது எப்போது?
தங்கவயலில் 20 ஆண்டாக முடங்கி கிடக்கும் பஸ் நிலையம்; பயணியர் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது எப்போது?
ADDED : ஆக 07, 2025 09:46 AM

தங்கவயலில் 2006ல் திறந்து வைக்கப்பட்டதே தவிர, இன்று வரை கர்நாடக அரசு போக்குவரத்துக் கழக பஸ் நிலையத்துக்கு விமோசனமே பிறக்கவில்லை. அனைத்து பஸ்களுமே ராபர்ட்சன்பேட்டை நகராட்சி பஸ் நிலையத்தில் இருந்து தான் இயக்கப்படுகின்றன.
தங்கவயலில் 20 ஆண்டுகளுக்கு முன்பு, அரசு போக்குவரத்துக் கழகத்துக்கென புதிய பஸ் நிலையம் அமைக்க 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த பஸ் நிலையத்தை ராபர்ட்சன்பேட்டை மையப் பகுதியில் அமைக்க திட்டம் தீட்டினர்.
இதற்காக 'டிராவலர்ஸ் பங்களா' என்ற பயணியர் விடுதி இடித்துத் தள்ளப்பட்டது. இந்த இடத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. 2006 ஜூலை 28ம் தேதி, அப்போதைய முதல்வர் குமாரசாமி திறந்து வைத்தார். திறந்ததுடன் சரி, பஸ் நிலையம் இன்று வரை முறையாக இயங்கவில்லை. இதற்கு மத்தியில், மஸ்கம் பகுதியில் இருந்த பஸ் பணிமனையை மூடினர். புதிய பஸ் நிலையத்தை இரண்டாக பிரித்து பணிமனை ஆக்கினர். பஸ் பணிமனையில் பணிகள் நடக்கின்றன. இங்கிருந்து, 121 பஸ்கள் இயக்கப்படுகின்றன. 463 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
தமிழகத்தின் சென்னைக்கு 4, வேலுாருக்கு -3, குடியாத்தத்துக்கு -3 பஸ்களும், ஆந்திர மாநிலம் வி.கோட்டா, சாந்திபுரம் பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
புதிய பஸ் நிலையத்தில் இருந்து சென்னை தவிர, வேறு எந்த பஸ்சும் இயங்குவதில்லை.
எனவே, புதிய பஸ் நிலையம் பெயரளவில் மட்டுமே உள்ளது. இது முதியோர் டைம் பாஸ் செய்யவும், ஓய்வெடுக்கவும் உதவுகிறது. கட்டண கழிப்பறை உள்ளது. இதை சிலர் பயன்படுத்தி வருகின்றனர்.
சுத்தமான குடிநீர் கிடைக்க கிராம மேம்பாடு மற்றும் பஞ்சாயத்துராஜ் திட்டத்தில் பல லட்சம் ரூபாய் செலவில் ஆர்.ஓ., வசதி அமைக்கப்பட்டது. ஆனால் நிறுவிய காலம் முதலே திறக்கப்படவில்லை. பயன்படுத்தப்படாததால் அதில் இருந்த உபகரணங்கள் பழுதடைந்து, அகற்றப்பட்டு விட்டன. பல லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்திய பஸ் நிலையம் பயனற்று உள்ளது.
பயணியர் சேவை மக்கள் சேவைக்காக இருப்பது தான், அரசு போக்குவரத்துக் கழகம். மக்கள் தேவைகளை நிறைவேற்ற தயாராக இருக்கிறோம். புதிய பஸ் நிலையத்தில் இருந்து பயணியர், பயணத்தை துவக்கினால், இங்கிருந்து பஸ்களை தாராளமாக இயக்க தயாராக இருக்கிறோம். ஆனால் பயணியர் இங்கு வருவதில்லையே. பழைய பஸ் நிலையம் அருகே போலீஸ் நிலையம், எம்.ஜி.மார்க்கெட், மருத்துவமனை, மருந்தகங்கள் என எல்லாமே உள்ளது. அரசு பஸ் நிலையத்திற்கு வர வேண்டுமானால் ஆட்டோவுக்கு 30 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இது பற்றி பயணியர் யோசிக்கின்றனர். புதிய பஸ் நிலையத்தில் குடிநீர் தேவை குறித்து அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு சென்று திறக்க தயாராக உள்ளோம். பயணியர் விருப்பத்தை நிறைவேற்ற தயாராக உள்ளோம். - நேத்ராவதி, பஸ் பணிமனை பொறுப்பு அதிகாரி.
நகர மேம்பாடு அரசு பணம் தானே, வீண் விரயம் செய்தால் யாருக்கு என்ன நஷ்டம் வரப்போகுதென, பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் நிலையம் இயக்கப்படவே இல்லை. ராபர்ட்சன்பேட்டையில் வர்த்தகம் பாதிக்கும் என்று ஒரு தரப்பினர் கூறி தடுத்ததாக கூறப்பட்டது. நகரம் மேம்பட வேண்டுமானால் இந்த பஸ் நிலையமும் இயங்க வேண்டும். அங்கும் புதிதாக வியாபாரமும் நடத்தலாம். ஆட்டோ ஓட்டுனர்களுக்கும் சவாரி கிடைக்கும். இங்கிருந்து தான் அனைத்து பஸ்களும் இயங்க வேண்டும். அழுத்தம் கொடுக்காததால் நிர்வாகம் தன் இஷ்டத்திற்கு செயல்படுகிறது. - கபில் குமார், கென்னடிஸ், உரிகம், தங்கவயல்.
மக்களிடம் பிரசாரம் நாடும், நாட்டிற்கு வளம் தரும் தங்கவயலும் மேம்பட வேண்டும் என்பது இந்த மண்ணின் மைந்தர்கள் விருப்பம். கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் நிலையம் திறக்கப்படுவதால் ஆண்டர்சன்பேட்டை, சாம்ராஜ்பேட்டை, மஸ்கம், கார்னேஷன் டவுன், இருதயபுரம், காந்திநகர், சாம்பியன், மாரிகுப்பம் பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும். ஆனால் பல லட்சம் ரூபாய் செலவு செய்தும் எந்த பிரயோஜனமும் இல்லை. எந்த நோக்கத்திற்காக பஸ் நிலையம் அமைக்கப்பட்டதோ அது மக்கள் பயன்பாட்டுக்கு வர வேண்டும். இது பற்றி, அரசு தான் மக்கள் மத்தியில் பிரசாரம் செய்ய வேண்டும். - லோகநாத பிள்ளை, ஆண்டர்சன்பேட்டை.
பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு தங்கவயல் மக்களுக்கு சமூக அக்கறை தேவை. நமக்கென்ன போச்சு என்று மவுனமாக இருப்பதால் கிடைக்க வேண்டிய சலுகைகள் வந்து சேருவதில்லை. சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும். இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் நிலையம் இருந்தும் இல்லாதது போல உள்ளது. இங்கிருந்து அனைத்து பஸ்களையும் இயக்கினால், பொதுமக்கள் அதனை பயன் படுத்திக் கொள்வர். அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு தேவை . - சாரங்கபாணி, கில்பர்ட்ஸ் வட்டம், தங்கவயல்.
இடம் வசதி தேவை ராபர்ட்சன்பேட்டை பழைய பஸ் நிலையத்தில் கூட்டம் அதிகம். ஒருநாள் கூட அமர்ந்து பயணம் செய்ய முடிவதில்லை. ஆயத்த ஆடை வேலைக்கு செல்லும் பெண்கள் தினமும் கஷ்டப்படுகிறோம். கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் நிலையம், 'ஸ்டார்ட்டிங் பாயின்ட்'டாக இருந்தால் இலவச பஸ் பயணத்தில் அமர்ந்து பயணம் செய்ய இடம் கிடைக்கும். கூட்ட நெரிசலை தவிர்க்க, கூடுதல் பஸ்களையாவது இயக்குவர். எங்களுக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் நிலையம் தான் பக்கமாக உள்ளது. இதனை அரசு பரிசீலித்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் . - சரிதா, மஸ்கம், ஆண்டர்சன்பேட்டை.
யார் கவனிப்பார்? ராபர்ட்சன்பேட்டை பழைய பஸ் நிலையத்தில் தனியார் பஸ்கள், இரு சக்கர வாகனங்கள், கார்கள் என பலவும் உள்ளன. இங்கு எந்த நேரத்தில் விபத்து ஏற்படுமோ என்ற அச்சம் உள்ளது. உட்காருவதற்கு இருக்கை அமைத்துள்ளனர். அதில் எப்போதுமே போதைக்காரர்கள் உள்ளனர். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை; தனி ஓய்வறை இல்லை. கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் நிலையத்தில் இருக்கைகள், குழந்தைகளுக்கு பாலுாட்ட தனி அறை, கேன்டீன், கழிப்பறை என அடிப்படை வசதிகள் உள்ளன. - -சீதா லட்சுமி, பழைய மாரிகுப்பம்.
- நமது நிருபர் -