/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
இலவச பாஸ் என்று அறிவித்தது யார்? ஆர்.சி.பி., அணி நிர்வாகி உட்பட 4 பேர் கைது
/
இலவச பாஸ் என்று அறிவித்தது யார்? ஆர்.சி.பி., அணி நிர்வாகி உட்பட 4 பேர் கைது
இலவச பாஸ் என்று அறிவித்தது யார்? ஆர்.சி.பி., அணி நிர்வாகி உட்பட 4 பேர் கைது
இலவச பாஸ் என்று அறிவித்தது யார்? ஆர்.சி.பி., அணி நிர்வாகி உட்பட 4 பேர் கைது
ADDED : ஜூன் 06, 2025 11:43 PM

பெங்களூரு: ஆர்.சி.பி., நடத்திய நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 11 பேர் இறந்த வழக்கில், ஆர்.சி.பி., அணியின் மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
சின்னசாமி மைதானம் அருகே 11 பேர் உயிரிழந்தது தொடர்பாக கப்பன் பார்க் போலீஸ் நிலையத்தில் ஆர்.சி.பி., நிர்வாகம், டி.என்.ஏ., என்ற தனியார் நிறுவனம், கர்நாடக மாநில கிரிக்கெட் அசோசியேஷன் மீது வழக்குப்பதிவானது.
இதுகுறித்து போலீசார் விசாரித்தபோது, ஆர்.சி.பி., அணியின் மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் நிகில் சோசலே, நிகழ்ச்சி குறித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட கருத்தால் தான் அதிக அளவில் கூட்டம் கூடியது என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரை போலீசார் தேடினர். நேற்று அதிகாலை 3:30 மணிக்கு அவர், பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு செல்ல முயன்றபோது அவரை போலீசார் கைது செய்தனர்.
டி.என்.ஏ., நிறுவனத்தின் துணைத்தலைவர் சுனில் மேத்யு, ஊழியர்கள் கிரண், சுமந்த் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் கப்பன் பார்க் போலீஸ் நிலையத்தில், சி.சி.பி., - டி.சி.பி., அக் ஷய் விசாரித்தார்.
'போலீஸ் துறை அனுமதி மறுத்த போதும், திறந்த பஸ்சில் பெங்களூரு அணியினர் ஊர்வலம் செல்வர். இலவச பாஸ் வழங்கப்படும் என பதிவிட்டதற்கு என்ன காரணம்? அப்படி பதிவிட சொன்னவர்கள் யார்? மைதானத்தின் நிகழ்ச்சி நிரல் எப்போது திட்டமிடப்பட்டது?
வெற்றி அணிவகுப்பை எப்போது முடிவு செய்தீர்கள்? பாஸ் வழங்குவதில் ஏன் குழப்பம்? எத்தனை ரசிகர்கள் கூடுவர் என்று உங்களுக்கு தெரியாதா? மைதானத்தின் எத்தனை நுழைவுவாயில்கள் திறந்து வைக்கப்பட்டு இருந்தன?' உட்பட, பல கேள்விகள் நான்கு பேரிடமும் கேட்கப்பட்டுள்ளது.
பின், நான்கு பேரையும், பெங்களூரு 41வது ஏ.சி.எம்.எம்., நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.
அவர்கள் அனைவரையும் 19ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனால் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையில் நிகில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவரது மனைவி, உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். நீதிபதி கிருஷ்ணகுமார் விசாரித்தார்.
நிகில் தரப்பில் ஆஜரான வக்கீல்கள் சந்தேஷ் சவுதா, நந்தகுமார் வாதிடுகையில், ''முதல்வரின் உத்தரவின்பேரில் தான் மனுதாரரை கைது செய்துள்ளனர். தாமாக முன்வந்து புகார் அளித்த கப்பன் பார்க் இன்ஸ்பெக்டரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார். மனுதாரர் கைது சட்டவிரோதமாக நடந்து உள்ளது,'' என்றனர்.
அரசு தரப்பு வக்கீல் ஆட்சேபனை தாக்கல் செய்ய அவகாசம் கேட்டதால், மனு மீதான விசாரணை 9ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.