UPDATED : நவ 19, 2026 12:00 AM
ADDED : நவ 18, 2026 08:02 PM
கிரிநகர்: ஆண் நபர் ஒருவரின் கை, கால்களை கட்டி, அவர் மீது மர்ம நபர்களால் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு தெற்கு மண்டல டி.சி.பி., வம்சி கிருஷ்ணா, நேற்று அளித்த பேட்டி:
பெங்களூரின், கிரிநகரின் சாலை ஒன்றில், நேற்று காலை 6:30 மணிக்கு, ஒருவர் தீக்காயங்களுடன் தவிப்பதாக, போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, அங்கு சென்ற கிரிநகர் போலீசார், அந்த நபரை மீட்டு, விக்டோரியா மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தீக்காயங்களுடன் இருந்த நபர், சையத் ஹாஜி என்ற முகமது என்பது, விசாரணையில் தெரிந்தது. இதற்கு முன் மாதநாயகனஹள்ளியில் வசித்த இவர், சமீபத்தில் கிரிநகருக்கு வந்திருந்தார். இவரை, மர்ம கும்பல் கை, கால்களை கட்டி, பெட்ரோல் ஊற்றி, தீ வைத்து விட்டு தப்பியோடியுள்ளது.
தற்போது மூச்சுத்திணறலால் அவதிப்படும் இவர், பேசும் நிலையில் இல்லை. குற்றவாளிகளை கண்டுபிடிக்க, மூன்று சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, விரைவில் குற்றவாளிகளை கண்டுபிடிப்போம்.
இவ்வாறு கூறினார்.
