UPDATED : நவ 29, 2026 12:00 AM
ADDED : நவ 28, 2026 08:44 PM

விஜயபுரா: ‘‘நான் தேசிய அரசியலுக்கு செல்ல மாட்டேன். லோக்சபா தொகுதிகள் மறு சீராய்வை, ஆதரிக்கிறேன்,’’ என, விஜயபுரா எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் தெரிவித்தார்.
விஜயபுராவில் நேற்று அவர் அளித்த பேட்டி:
நான் தேசிய அரசியலுக்கு செல்வது என்ற கேள்விக்கே இடம் இல்லை. தற்போது நான் எம்.எல்.ஏ.,வாக இருக்கிறேன். தொகுதிகள் மறு சீராய்வு செய்யப்பட்டாலும், விஜயபுரா சட்டசபை தொகுதி இருக்கும்.
நான் எம்.பி.,யாக, 10 ஆண்டுகள் இருந்துள்ளேன். எம்.பி.,க்கு அதிக பணிகள் இல்லை. கை துாக்குவது, மேஜையை தட்டுவதே வேலை. லோக்சபா தொகுதி பெரிதாக உள்ளது. மக்கள்தொகை அடிப்படையில், தொகுதிகள் மறு சீராய்வு செய்வதை நான் ஆதரிக்கிறேன்.
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் மறு சீராய்வு செய்யப்பட்டால், அனைவருக்கும் நியாயம் கிடைக்கும். மக்கள் பிரதிநிதிகள், நேரடியாக மக்களிடம் சென்று பணியாற்றவும், உதவியாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
