/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஓட்டு திருட்டு குறித்து மவுனமாக இருந்தது ஏன்? காங்., தலைவர்களுக்கு ராஜண்ணா கேள்வி
/
ஓட்டு திருட்டு குறித்து மவுனமாக இருந்தது ஏன்? காங்., தலைவர்களுக்கு ராஜண்ணா கேள்வி
ஓட்டு திருட்டு குறித்து மவுனமாக இருந்தது ஏன்? காங்., தலைவர்களுக்கு ராஜண்ணா கேள்வி
ஓட்டு திருட்டு குறித்து மவுனமாக இருந்தது ஏன்? காங்., தலைவர்களுக்கு ராஜண்ணா கேள்வி
ADDED : ஆக 11, 2025 04:48 AM
துமகூரு: ''எங்கள் அரசு இருந்த போதுதான், வாக்காளர் பட்டியல் தயாராகியுள்ளது. இதில் நடந்த முறைகேட்டை தடுக்காமல், இப்போது பேசுவதற்கு வெட்கப்பட வேண்டும்,'' என கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜண்ணா தெரிவித்தார். காங்கிரசில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் சில நாட்களாக, ஓட்டு திருட்டு குறித்து பரபரப்பாக பேசப்படுகிறது. லோக்சபா முடிந்து ஒன்றரை ஆண்டுகள் ஆன நிலையில், அந்த தேர்தலில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், டில்லியில் ஊடகத்தினர் சந்திப்பில், பா.ஜ., மீது புகார் பட்டியலை வாசித்தார்.
முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் பரமேஸ்வர், சதீஷ் ஜார்கிஹோளி உட்பட, பலரும் பா.ஜ.,வை விமர்சித்தனர். ஓட்டு திருட்டை முன் வைத்து, பெங்களூரில், ஆகஸ்ட் 8ம் தேதி ராகுல் தலைமையில் போராட்டம் நடத்தினர்.
அதிருப்தி இந்த வேளையில், காங்கிரசை சேர்ந்த கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜண்ணா, சொந்த கட்சி தலைவர்கள் மீதே அதிருப்தி தெரிவித்துள்ளார்.
துமகூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
ஓட்டு திருட்டு நடந்திருப்பது உண்மைதான். இதை முதலிலேயே பார்க்காமல், இப்போது கூறுவது வெட்கக்கேடானது. ஓட்டு திருட்டு பற்றி பேச ஆரம்பித்தால், எங்கேயோ கொண்டு போய் விட்டுவிடும். லோக்சபா தேர்தல் நடந்தது, வாக்காளர் பட்டியல் தயாரானது, எங்கள் அரசு காலத்தில்தான். அப்போது கண்ணை மூடிக்கொண்டு அமர்ந்திருந்தனரா.
எச்சரிக்கை ஓட்டு திருட்டு நடந்துள்ளது. இதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் நம் கண் முன்னே அனைத்தும் நடந்துள்ளது. இதை தடுக்காமல் மவுனமாக இருந்தது, அவமானமாக உள்ளது. தவறு நடக்காமல் தடுக்கவில்லை. இச்சம்பவத்தால், பாடம் கற்றுக்கொண்டு, வரும் நாட்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்து, நரேந்திர மோடி பிரதமரானார்.
எங்கள் கட்சியில் வரும் நாட்களில், தலைவர்களை வளர்த்து விடுவரா என்பது சந்தேகம். யாராவது ஒரு தலைவன், மக்களின் மத்தியில் இருக்கிறார்; மக்களிடம் நன்மதிப்பை பெறுகிறார் என்றால், மற்ற தலைவருக்கு பொறாமை ஏற்படுகிறது. இதனால், எங்கள் மாவட்டத்தின் கூட்டுறவு வங்கியை, இரண்டு முறை கலைத்தனர். இதை செய்தது எங்கள் கட்சியினர் தான். வேறு கட்சிகள் அதை செய்யவில்லை.
நல்ல பாடம் எங்கள் கட்சியில் எனக்கு நல்ல பாடம் கற்பித்துள்ளனர். சந்தர்ப்பம் வாய்த்தால் நமக்கான நியாயத்தை, எந்த வகையில் பெற வேண்டும் என்பதை கற்றுக்கொண்டேன். எனக்கு வளரவும் வாய்ப்பு கிடைத்தது. அனைத்து சம்பவங்களையும், கவனத்தில் வைத்து கொண்டு, யார், யார் எப்படி நடந்து கொண்டனர், அவர்களின் பேச்சு மற்றும் செயல்களை, நான் கவனிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர் ராஜண்ணாவின் பேச்சு, காங்கிரசில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓட்டு திருட்டு பற்றி, இப்போது பேசும் தலைவர்கள், அப்போது மவுனமாக இருந்தது ஏன் என, பகிரங்கமாகவே கேள்வி எழுப்பி உள்ளார். இவரது வாய்க்கு பூட்டு போட முடியவில்லையே என, தலைவர்கள் உள்ளுக்குள் புலம்புகின்றனர்.