/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மது போதையில் தினமும் தகராறு கணவரை கொன்ற மனைவி கைது
/
மது போதையில் தினமும் தகராறு கணவரை கொன்ற மனைவி கைது
மது போதையில் தினமும் தகராறு கணவரை கொன்ற மனைவி கைது
மது போதையில் தினமும் தகராறு கணவரை கொன்ற மனைவி கைது
ADDED : டிச 26, 2025 06:45 AM
வர்த்துார்: வேலைக்கு செல்லாமல், குடிபோதையில் தினமும் தகராறு செய்த கணவரை கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டார்.
அசாமை சேர்ந்தவர் ராஜிவ் ரஜபூத், 28. இவரது மனைவி ருபினா கவுர், 24. இவர்கள் பிழைப்பு தேடி பெங்களூரு வந்தனர். வர்த்துாரின் முனேகோளலுவின், ஷிருடி சாய்பாபா கோவில் அருகே வசித்து வந்தனர்.
குடிப்பழக்கத்துக்கு அடிமையான ராஜிவ், சரியாக வேலைக்கு செல்வதில்லை. தினமும் குடிபோதையில் வீட்டுக்கு வருவார்; மனைவியுடன் தகராறு செய்வார். குடும்ப நிர்வகிப்புக்கு பணம் இல்லாமல், ருபினா கவுர் பரிதவித்தார். உணவுக்கும், அன்றாட தேவைகளுக்கும் பணம் வேண்டியிருந்ததால், வேலைக்கு செல்வதாக கூறினார்.
ஆனால், மனைவி வேலைக்கு செல்லவும் ராஜிவ் அனுமதிக்கவில்லை. இதனால், தம்பதிக்கு இடையே தினமும் சண்டை நடந்துள்ளது. நேற்று முன்தினம் இரவும், வழக்கம் போன்று குடிபோதையில் வந்து, மனைவியுடன் தகராறு செய்தார் ராஜிவ்.
இதனால், மனைவி கோபத்தில் இருந்தார். நேற்று காலை எழுந்தவுடன், மீண்டும் ராஜிவ் சண்டையை துவக்கினார். பொறுமை இழந்த ருபினா கவுர், சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து, கணவரின் மார்பு, வயிறு உட்பட பல இடங்களில் ஆவேசமாக குத்தினார்.
அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது, ராஜிவ் ரத்த காயங்களுடன் விழுந்து கிடப்பது தெரிந்தது. உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து, வர்த்துார் போலீசார் அங்கு வந்தனர். இறந்து கிடந்த ராஜிவ் உடலை, மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு, ருபினா கவுரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

