/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை; காங்கிரஸ் அரசை 'காவு' வாங்குமா?
/
ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை; காங்கிரஸ் அரசை 'காவு' வாங்குமா?
ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை; காங்கிரஸ் அரசை 'காவு' வாங்குமா?
ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை; காங்கிரஸ் அரசை 'காவு' வாங்குமா?
UPDATED : ஏப் 23, 2025 09:05 AM
ADDED : ஏப் 23, 2025 06:47 AM

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அடுத்த மாதம் 20ம் தேதியுடன் அரசு அமைந்து, இரண்டு ஆண்டுகள் நிறைவடைகிறது.
கசிந்த தகவல்
கர்நாடகாவில் சட்டசபை, லோக்சபா தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெற வேண்டும் என்பதை தீர்மானிக்கும் பெரிய சக்தியாக லிங்காயத், ஒக்கலிகர்கள் ஓட்டுகள் உள்ளன. குறிப்பாக தென் மாவட்டங்களில் ஒக்கலிகர்கள், வடமாவட்டங்களில் லிங்காயத் சமூகத்தினர் அதிகளவில் வசிக்கின்றனர்.
இந்நிலையில் இந்த இரண்டு சமூகத்தினரின், கண்களை சிவக்க வைக்கும் வகையில், ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை உள்ளது. எஸ்.சி., முஸ்லிம் சமூக மக்கள் கர்நாடகாவில் அதிகளவு வசிப்பதாக, அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த அறிக்கை அமல்படுத்தப்பட்டால் தங்களது மவுசு குறையும் என்று, லிங்காயத், ஒக்கலிக சமூகங்களுக்கு பயம் ஏற்பட்டு உள்ளது.
இதனால் இரண்டு சமூகங்களின் மக்கள் பிரதிநிதிகள், மடாதிபதிகள் அறிக்கைக்கு எதிராக உள்ளனர்.
ஆனால் அஹிந்தா எனும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் தலைவராக தன்னை கூறிக் கொள்ளும் சித்தராமையா, ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை அமல்படுத்த வேண்டும் என்ற போர்வையில் தன் முதல்வர் பதவியை தக்க வைப்பதில் ஆர்வம் காட்டுகிறார்.
முதல்வருக்கு, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் ஆதரவும் இருப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை அமல்படுத்தப்பட்டால், ஆளுங்கட்சியில் உள்ள லிங்காயத், ஒக்கலிகர் சமூக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் கண்டிப்பாக எதிர்ப்பு தெரிவிப்பர்.
அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, லிங்காயத் அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஏற்கனவே சென்னகிரி காங்கிரஸ் எம்.எல்.ஏ., பசவராஜ் சிவகங்கா அழைப்பு விடுத்து இருந்தார்.
2 பக்கமும் இடி
காங்கிரசில் தற்போது 34 லிங்காயத்; ஒக்கலிகர்கள் 24 பேர் மொத்தம் 58 பேர் எம்.எல்.ஏ.,வாக உள்ளனர். இவர்களில் 25 பேர் முதல் 30 பேர் ராஜினாமா செய்தால் அரசு கவிழ்ந்து விடும்.
லிங்காயத், ஒக்கலிகர்களை சமாதானப்படுத்துவதற்காக ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை தாக்கல் செய்யாமல் விட்டால், மற்றொரு தரப்பினர் சும்மா இருக்க மாட்டார்கள்.
உண்மையை சொல்ல போனால், காங்கிரஸ் அரசுக்கு ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை தலைக்கு மேல் தொங்கும் கத்தி போல உள்ளது. அறிக்கை அமல்படுத்தப்பட்டால் எதிர்க்கட்சி தலைவர்கள் கூறுவது போன்று, எந்த நேரத்திலும் ஆட்சி கவிழ நிறைய வாய்ப்பு உள்ளது.
இந்த இக்கட்டான சூழ்நிலையை முதல்வரும், காங்கிரஸ் மேலிடமும் எப்படி சமாளிக்க போகின்றனர் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி என்பது போல, சித்தராமையாவுக்கு இரண்டு பக்கத்தில் இருந்தும் அடி விழுகிறது. எப்படி தப்பிப்பது என்று தெரியாமல் கையை பிசைந்து கொண்டு நிற்கிறார்.
கடந்த 2013 - 2018 காங்கிரஸ் ஆட்சியில் மக்களுக்காக பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது என்று கூறினாலும், ஆட்சி முடியும் தருவாயில் லிங்காயத் சமூகங்கள் இடையில் பிரிவினையை உண்டாக்க, சித்தராமையா முயற்சி செய்ததால், 2018 சட்டசபை தேர்தலில் லிங்காயத் மக்கள் காங்கிரசுக்கு தோல்வியை பரிசாக கொடுத்தனர். ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையின் நிலை என்னவாகும் என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
- நமது நிருபர் -