ADDED : ஜூன் 07, 2026 11:32 PM
கலபுரகி: கலபுரகி நகரின், ஸ்டேஷன் பஜார் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில், சாலையில் காகிதம், பிளாஸ்டிக் சேகரித்து வாழ்க்கை நடத்தி வந்த பெண்ணின் மகள், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
இது குறித்து, அவரது தாய் ஸ்டேஷன் பஜார் போலீஸ் நிலையத்தில், புகார் அளித்தார். போலீசாரும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்துகின்றனர்.
இந்த போலீஸ் நிலையத்தில், ஏ.எஸ்.ஐ.,யாக சரணபசப்பாவும், ஏட்டாக ஜோதியும் பணியாற்றுகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயிடம், போலீஸ் நிலைய ஏட்டு ஜோதி, 'போக்சோ' வழக்கில் வாதிட, அரசு தரப்பு வக்கீலுக்கு 1,000 ரூபாய் கொடுக்க வேண்டும் என, கூறி பணத்தை பெற்று கொண்டார். அதன்பின், சட்ட உதவிகள் செய்ய, தனக்கும், ஏ.எஸ்.ஐ., க்கும் தலா 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என, கேட்டார்.
இதனால் மனம் நொந்த பெண், லோக் ஆயுக்தாவில் புகார் அளித்தார். லோக் ஆயுக்தா போலீசாரும், ஏட்டுவிடம் பணம் கொடுக்கும்படி கூறினர்.
இதன்படி அந்த பெண், நேற்று மதியம் ஸ்டேஷன் பஜார் போலீஸ் நிலையத்துக்கு சென்று, ஏட்டு ஜோதியிடம் 10,000 ரூபாய் கொடுத்தார்.
அப்போது திடீர் சோதனை நடத்திய லோக் ஆயுக்தாவினர், லஞ்சம் வாங்கிய ஜோதியை, கையும், களவுமாக பிடித்தனர். பணத்தை கைப்பற்றினர்.
அப்போது ஏ.எஸ்.ஐ., சரண பசப்பா அங்கிருந்து தப்பியோடினார். அவரை லோக் ஆயுக்தா போலீசார், விரட்டி சென்று பிடித்தனர். இருவரிடமும் விசாரணை நடத்துகின்றனர்.
