ADDED : செப் 06, 2026 11:22 PM

ராம்நகர்: சாலையில் சென்று கொண்டிருந்த, அமைச்சர் பாலகிருஷ்ணாவின் காரை தடுத்து நிறுத்திய பெண், அமைச்சரை தன் வீட்டுக்கு உணவுக்கு வருமாறு, அழைப்பு விடுத்தார்.
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா, நேற்று காலை மாகடிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அமைச்சர் செல்வதை பார்த்த, தேவம்மா, 70, என்ற பெண், காரை நிறுத்தினார். அமைச்சர் பாலகிருஷ்ணாவுக்கு, திருஷ்டி எடுத்து அன்புடன் பேசினார்.
'தேர்தலின் போது நீ, எங்கள் வீட்டருகில் வந்தாய். அப்போது 'நீ வெற்றி பெறுவாய்' என, நான் ஆசிர்வதித்தேன். அதே போல், நீ வெற்றி பெற்றதுடன், அமைச்சராகி வந்துள்ளாய். உனக்கு மேலும் நல்லது நடக்கட்டும்' என, வாழ்த்தினார்.
சமீபத்தில் மத்திய அமைச்சர் குமாரசாமியை, அமைச்சர் பாலகிருஷ்ணா அவ்வப்போது விமர்சிக்கிறார். இதை நினைவு கூர்ந்த பெண், 'குமாரசாமியை இப்படி திட்டுகிறாயே... உனக்கு எவ்வளவு தைரியம்' என, வேடிக்கையாக கேட்டார். அதன்பின் தன் வீட்டுக்கு வந்து, உணவு சாப்பிடும்படி அமைச்சரை அழைத்தார்.
மேலும், 'தன் வீட்டருகில் கழிவு நீர் தேங்குகிறது. அதை சரி செய்யுங்கள்' என, அந்த மூதாட்டி வேண்டுகோள் விடுத்தார். மூதாட்டியின் அன்பால் நெகிழ்ச்சி அடைந்த அமைச்சர் பாலகிருஷ்ணா, மூதாட்டியின் பிரச்னையை விரைவில் சரி செய்வதாக கூறி, அங்கிருந்து சென்றார்.
