பலாத்காரம் செய்ததால் ஆத்திரம் இருவரை நிர்வாணமாக்கிய பெண்
பலாத்காரம் செய்ததால் ஆத்திரம் இருவரை நிர்வாணமாக்கிய பெண்
UPDATED : அக் 30, 2026 12:00 AM
ADDED : அக் 29, 2026 11:36 PM
மாரத்தஹள்ளி: பலாத்காரம் செய்து மிரட்டிய இருவரை, காதலனுடன் சேர்ந்து கூலிப்படை ஏவி கடத்திய இளம்பெண், இருவரையும் நிர்வாணமாக்கி தாக்கியதுடன், அவர்களை கொலை செய்ய முயன்றார்.
ஆந்திராவின் மதனப்பள்ளியை சேர்ந்தவர்கள் மகேந்திரா, 32, தருண், 31, மஞ்சுநாத், 32. இவர்கள் மூன்று பேரும் பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கின்றனர்.
மாரத்தஹள்ளியில் இரண்டு அறைகள் கொண்ட, வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர்.
கடந்த 24ம் தேதி மஞ்சுநாத் மதனப்பள்ளிக்கு சென்றிருந்தார். அன்றைய தினமே அவரிடம் மொபைல் போனில் பேசிய நண்பரான ராம்குமார், ‘எனது காதலியுடன் பெங்களூரு வந்துள்ளேன். இன்று ஒரு நாள் இரவு உங்கள் வீட்டில் தங்கி கொள்கிறேன்’ என்று கேட்டுள்ளார். இதற்கு மஞ்சுநாத் சம்மதம் தெரிவித்தார்.
தருண், மகேந்திராவிடம், தனது நண்பர் மட்டும் வருவதாக கூறினார்.
கூலிப்படை
கடந்த 24ம் தேதி இரவு மஞ்சுநாத் வீட்டிற்கு, ராம்குமார் மட்டும் முதலில் வந்தார். சிறிது நேரம் கழித்து அவரது காதலி வந்தார். குடிபோதையில் இருந்த மகேந்திராவும், தருணும், ராம்குமாரை தாக்கி, அவரை ஒரு அறையில் அடைத்தனர்.
ராம்குமாரின் காதலியை இருவரும் பலாத்காரம் செய்தனர். ‘வெளியே கூறினால் கொன்று விடுவோம்’ என்று ராம்குமாரையும், அவரது காதலியையும் மிரட்டி அனுப்பினர். காதலி பலாத்காரத்திற்கு ஆளானது பற்றி மஞ்சுநாத்திடம், ராம்குமார் கூறினார்.
அதிர்ச்சி அடைந்த மஞ்சுநாத், மகேந்திரா மற்றும் தருணுக்கு பாடம் புகட்ட நினைத்தார். மதனப்பள்ளியில் வசிக்கும் இரண்டு இளைஞர்கள் குழுவுக்கு, பணம் கொடுத்து அவர்களை கூலிப்படையாக மாற்றினார்.
ரூ.10 லட்சம்
மஞ்சுநாத்தும், பெங்களூரு வந்து மகேந்திரா, தருண் நடமாட்டத்தை கண்காணித்து தகவல் கொடுத்தார். நேற்று முன்தினம் அதிகாலை பெங்களூரு வந்த ராம்குமார், அவரது காதலி, கூலிப்படையை சேர்ந்த எட்டு பேர், வேலை முடிந்து வீட்டிற்கு வந்த தருண், மகேந்திராவை காரில் கடத்தினர்.
மகேந்திரா தந்தைக்கு போன் செய்து, 10 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டினர். பெங்களூரு வந்த அவர், மாரத்தஹள்ளி போலீசில் புகார் செய்தார். மொபைல் போன் டவர் மூலம் கண்காணித்ததில், நாகரபாவியில் உள்ள வீட்டில் தருண், மகேந்திரா அடைக்கப்பட்டு இருந்தது தெரிந்தது.
அங்கு சென்ற போலீசார், நிர்வாண நிலையில் இருந்த இருவரையும் மீட்டனர். இருவரையும் நிர்வாணமாக்கி தாக்கியதும் தெரிந்தது. ராம்குமார், அவரது காதலி, மஞ்சுநாத் உட்பட 11 பேரை கைது செய்தனர். பலாத்காரத்திற்கு ஆளான இளம்பெண் அளித்த புகாரில், மகேந்திரா, தருணும் கைது செய்யப்பட்டனர்.
கைதான, 11 பேரிடம் விசாரித்த போது, மகேந்திராவை கொன்று ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் உடலை வீசவும், தருணை கொன்று உடலை துாக்கில் தொங்க விடவும் திட்டம் தீட்டப்பட்டிருந்த, அதிர்ச்சி தகவல் வெளியானது.
