அமைச்சரவையில் இடமில்லையே மகளிர் ஆணைய தலைவி வருத்தம்
அமைச்சரவையில் இடமில்லையே மகளிர் ஆணைய தலைவி வருத்தம்
ADDED : நவ 23, 2026 06:18 AM

உத்தர கன்னடா: கர்நாடக அமைச்சரவையில் பெண் அமைச்சர்கள் இல்லாதது குறித்து, மாநில மகளிர் ஆணைய தலைவி நாகலட்சுமி சவுத்ரி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
உத்தர கன்னடாவின் கார்வாரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
மாநில மக்கள் தொகையில், பாதியளவு பெண்கள் உள்ளனர். அப்படி இருந்தும் அமைச்சரவையில், பெண்களுக்கு ஒரு இடம் கூட அளிக்காதது, வருத்தத்துக்குரிய விஷயம்.
பெண் அமைச்சர்களே இல்லாமல், சட்டசபை கூட்டங்களை நடத்துவது, ஜனநாயக நடைமுறைக்கும், பெண் சமுதாயத்தையும் மதிப்பை அளிக்காது.
பெண்கள் இல்லாமல் சட்ட சபையை நடத்த கூடாது. இது பற்றி நான் ஏற்கனவே, அரசுக்கு கடிதம் எழுதினேன். ஆனால் அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை.
மகளிர் ஆணைய தலைவியாக, அரசின் தோரணையை நான் வன்மையாக கண்டிக்கிறேன். பெண்களுக்கு இடம் ஒதுக்கீடு அளித்து, சட்டம் கொண்டு வந்தால் மட்டுமே, அரசியல் கட்சிகள் பெண்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தாமாக முன் வந்து பெண்களின் தகுதி, திறமையை கவனித்து வாய்ப்பு அளிக்கும் மனநிலை, யாருக்கும் இல்லை. அரசு இனியாவது தாமதிக்காமல், பெண் எம்.எல்.ஏ.,வை அமைச்சராக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
