/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பள்ளி வளர்ச்சியில் ஆர்வம் காட்டிய பெண்கள்
/
பள்ளி வளர்ச்சியில் ஆர்வம் காட்டிய பெண்கள்
ADDED : ஜன 19, 2026 05:50 AM

அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகளை செய்வதில் அரசு அலட்சியம் காட்டும் வேளையில், சில அதிகாரிகளின் முயற்சியால் அரசு பள்ளிகளுக்கு புத்துயிர் கிடைக்கிறது.
ராய்ச்சூர் மாவட்டத்தின் மெதிகினாளா கிராமத்தில் அரசு தொடக்க பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரையில் 156 மாணவர்கள் படிக்கின்றனர். சில மாதங்களுக்கு முன், இப்பள்ளி சீர் குலைந்திருந்தது. வெளிப்புறம் மற்றும் வகுப்பறைகளுக்கு பெயின்ட் அடித்து பல ஆண்டுகள் ஆகியிருந்தன. வகுப்பறைகளின் மேற்கூரை எப்போது இடிந்து விழுமோ என்ற நிலை காணப்பட்டது.
கழிப்பறையும் மிகவும் மோசமாக இருந்தது. இதனால் பிள்ளைகளை சேர்க்க பெற்றோர் தயங்கினர்; வேறு பள்ளிக்கு மாற்றினர். அரசு பள்ளியில் மாணவர் எண்ணிக்கை குறைந்தது. இதை கவனித்து, வருத்தமடைந்த ஆசிரியர் மவுனேஷ், மாவட்ட கல்வித்துறை அதிகாரி சுஜாதா ஹுனுாரா கவனத்துக்கு கொண்டு சென்றார்.
அவர், பள்ளி சீரமைப்புக்கு நிதி வழங்கும்படி, அதிகாரிகளிடம் கோரினார். அவர்களோ நிதி வழங்காமல் தாமதித்தனர். எனவே பெங்களூரில் செயல்படும் 'கிருதக்ஞதா டிரஸ்ட்' கவனத்துக்கு கொண்டு சென்று உதவி கேட்டார். டிரஸ்ட் நிறுவனர் அருணா திவாகர், நிதி வழங்கினார். அதன்பின் பள்ளியில் சீரமைப்பு பணிகள் நடந்தன.
வகுப்பறைகள், காம்பவுன்ட் சுவர் உட்பட அனைத்து இடங்களுக்கும் பெயின்ட் அடிக்கப்பட்டது. இடிந்த பகுதிகள் புதுப்பிக்கப்பட்டன. தற்போது மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வருகின்றனர்.
- நமது நிருபர் -

