/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மதுவை ஒழிக்க பேரணி நடத்தி அரசை மிரட்டிய பெண்கள்
/
மதுவை ஒழிக்க பேரணி நடத்தி அரசை மிரட்டிய பெண்கள்
ADDED : நவ 10, 2025 04:18 AM

பல குடும்பங்களை நடுத்தெருவுக்கு கொண்டு வந்த மதுபானத்தை தடை செய்ய வலியுறுத்தி, ஆயிரக்கணக்கான பெண்கள் மாபெரும் பேரணி நடத்தி, அரசை மிரள வைத்தனர். நவம்பர் 25ல் பெங்களூரின், சுதந்திர பூங்காவில் காலவரையற்ற சத்யாகிரகம் போராட்டத்தை துவக்க திட்டமிட்டுள்ளனர்.
குடும்பத்தில் ஒருவருக்கு குடிப்பழக்கம் இருந்தால், அந்த குடும்பமே அழிந்து போகும். குடியால் அழிந்த குடும்பங்களுக்கு கணக்கே இல்லை. மதுபானத்தை ஒழிக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக பெண்கள் குரல் கொடுக்கின்றனர். ஆனால் இதுவரை கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டது இல்லை.
பெலகாவி மாவட்டத்திலும், மதுபானத்தால் குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. பல்வேறு கிராமங்களில் வீடுகள், பான் ஷாப், பெட்டிக்கடைகள், குளிர்பான கடைகளிலும் கூட, எந்த பயமும் இல்லாமல் மதுபானம் விற்கின்றனர். மதுபானம் எளிதில் கிடைத்ததால், இளைஞர்களும் குடிப்பழக்கத்துக்கு ஆளாகினர்.
மதுபானத்துக்கு தடை விதிக்கும்படி, பெண்கள் பலமுறை போராட்டம் நடத்தினர். பெலகாவியில் இருந்து, பெங்களூரு வரை பாதயாத்திரையும் நடத்தினர். ஆனால் பயன் இல்லை.
அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், சில நாட்களுக்கு முன் பிரம்மாண்ட மனித சங்கிலி ஊர்வலம் நடத்தினர். இதில் பல ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்றனர். சாலை மறியலும் நடத்தி, மதுபானத்தை ஒழிக்கும்படி வலியுறுத்தினர்.
இது குறித்து, பெலகாவியின் அனிதா பெளகாவகர் கூறியதாவது:
சில இடங்களில் லைசென்ஸ் பெற்று, மதுபான கடை நடத்துகின்றனர். மற்றொரு பக்கம் வீடுகள், சில்லரை கடைகள், பான் ஷாப், குளிர்பான கடைகள், பெட்டிக்கடைகளில் சட்டவிரோதமாக மதுபானம் பதுக்கி வைத்து விற்கின்றனர். இவர்களுக்கு சட்டத்தை பற்றிய பயமே இல்லை.
குடிப்பழக்கம் காரணமாக, பல வீடுகளில் ஆண்களே இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கணவரை இழந்து பெண்கள் விதவைகளாக வாழ்கின்றனர். சிறுவர்கள், இளைஞர்களும் குடிப்பழக்கத்தால், தங்களின் வாழ்க்கையை பாழாக்குகின்றனர். எங்கள் குடும்பங்களை பாழாக்குவது சரியல்ல. ஏழை வீட்டு பிள்ளைகளின் எதிர்காலத்தை காப்பாற்ற வேண்டும்.
ஆண்கள் தினமும் குடித்து வந்து, வீட்டில் தொல்லை கொடுப்பதால், பெண்கள் சாப்பிடவும் முடிவது இல்லை. குடிப்பழக்கம், குடும்பங்களின் நிம்மதியை கெடுத்துள்ளது. பிள்ளைகளால் படிக்க முடிவதில்லை. வாழ்க்கையே நரகமாகிறது. வலியை சகிக்க முடியாமல், பொங்கியெழுந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். ஆயிரக்கணக்கான பெண்கள், ஊர்வலம் நடத்தி பெலகாவி மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தோம்.
மக்களின் வாழ்க்கையை பாழாக்கி, அரசு நடத்துவது சரியல்ல. மதுபானத்தை தடை செய்ய வேண்டும். எங்களின் கோரிக்கை நிறைவேறாவிட்டால், நவம்பர் 25ம் தேதி மாநிலம் முழுதும், லட்சக் கணக்கான பெண்கள் திரண்டு பெங்களூரின் சுதந்திர பூங்காவில், காலவரையற்ற சத்யாகிரகம் நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

