/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெண்களுக்கு சிலம்பம் கற்பிக்கும் மகளிர் அமைப்பு
/
பெண்களுக்கு சிலம்பம் கற்பிக்கும் மகளிர் அமைப்பு
ADDED : நவ 17, 2025 12:01 AM

இன்றைய சூழ்நிலையில், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. கர்நாடகாவின் பெங்களூரு உட்பட பல்வேறு மாவட்டங்களில் பெண்கள், சிறுமியர் பாலியல் பலாத்காரம், பாலியல் தொல்லைக்கு ஆளாகின்றனர். தசரா நேரத்தில் பெற்றோருடன் விளையாட்டு பொருட்களை விற்க, மைசூருக்கு வந்த 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி, கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் மாநிலத்தையே உலுக்கியது.
பஸ்கள், ஆட்டோ, வாடகைக் கார்களில் பயணிக்கும் பெண்களும் கூட, பாலியல் தொல்லைக்கு ஆளாகின்றனர்.
சிலர் தைரியமாக முன் வந்து, போலீசாரிடம் புகார் அளிக்கின்றனர். ஆனால் பலரும் புகார் அளிக்க தயங்கி, மவுனமாக இருப்பதால், பல சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வருவதில்லை.
கடிவாளம் பெண்களுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்த, போலீசார் கடும் நடவடிக்கை எடுத்தும், குற்றங்களை தடுக்க முடியவில்லை. அனைத்து பெண்களுக்கும் போலீசாரால் பாதுகாப்பு அளிக்க முடியாது என்பதில், மாற்று கருத்தே இருக்க முடியாது. பெண்கள் தங்களை தாங்களே தற்காத்து கொள்ளும் அவசியம் உள்ளது. அப்போதுதான் பாலியல் வன்கொடுமைகளுக்கு கடிவாளம் போட முடியும்.
இதை மனதில் கொண்டே, பெரும்பாலான தனியார் பள்ளிகளில் மாணவியருக்கு கராத்தே, குங்பூ போன்ற தற்காப்பு கலையை கற்று கொடுக்கின்றனர். தனியார் பள்ளிகளில் படிக்கும் வசதியான மாணவியரால், கட்டணம் செலுத்தி தற்காப்பு கலையை கற்றுக்கொள்ள முடியும். ஆனால், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவியருக்கு வசதி இருப்பது இல்லை. இதை மனதில் கொண்டு, மகளிர் அமைப்புகள், பெண்களுக்கு இலவசமாக தற்காப்பு கலை கற்று தருகிறது. கதக் நகரில் கிராந்தி சேனா, ஹிந்து ஜன ஜாக்ருதி, ராஜராஜேஸ்வரி மகளிர் அமைப்பு சார்பில், பெண்களுக்கு சிலம்பம் கற்றுத்தரப்படுகிறது.
'நமது பாதுகாப்பு நமது பொறுப்பு' என்ற உறுதியுடன், கையில் தடியை சுழற்றி பயிற்சி பெறுகின்றனர். இவர்களுக்கு கோவாவில் இருந்து பயிற்சியாளரை வரவழைத்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
45 வயது பெண்கள் கடந்த ஒரு வாரமாக 14 வயது முதல் 45 வயது வரையிலான பெண்கள், ஆர்வத்துடன் சிலம்பம் கற்கின்றனர். இது அவர்களுக்குள் தைரியத்தை அளிக்கிறது. பயமின்றி வெளியே நடமாட முடிகிறது என்கின்றனர்.
கிராந்தி சேனா மகளிர் அமைப்பு தலைவி ராணி ராகவேந்திரா சந்தாவரி கூறியதாவது:
வீட்டில் இருந்து வெளியே செல்லும் பெண்கள், பாதுகாப்புடன் வீடு திரும்புவர் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. இவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. எனவே இவர்களுக்கு தற்காப்பு கலை கற்று தருகிறோம்.
கையில் தடி இருந்தாலும், அதை எப்படி பயன்படுத்தி தற்காத்து கொள்வது என, பெண்களுக்கு தெரிவது இல்லை. இதை நாங்கள் கற்று தருகிறோம். கதக் நகரில் உள்ள 35 வார்டுகளில் இருந்தும் பெண்கள், இளம் பெண்கள் சிலம்ப பயிற்சியில் பங்கேற்கின்றனர். தடி இல்லாமலும் கைகளை பயன்படுத்தியும், தங்களை எப்படி தற்காத்துக் கொள்வது என, பயிற்சி அளிக்கிறோம்.
தற்காப்பு கலை பெண்களுக்கு தைரியம், தன்னம்பிக்கையை அளிக்கும். யாருடைய துணையும் இல்லாமல் நடமாட உதவியாக இருக்கும். அபாயமான நேரத்தில், சமூக விரோதிகளிடம் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

