ADDED : பிப் 17, 2026 05:45 AM

சிக்கமகளூரு: பணிக்கு சென்று கொண்டிருந்த கட்டட கூலி தொழிலாளியை, யானை மிதித்து கொன்றது.
ஹாவேரி மாவட்டம் ஹனகல்லின் திருவள்ளியை சேர்ந்தவர் எல்லப்பா, 45; கட்டட தொழிலாளி. சிக்கமகளூரு மாவட்டம் ஹுனசேஹள்ளி அருகேயுள்ள புரா கிராமத்தில் தங்கி வேலை செய்து வந்தார்.
நே ற்று மதியம் பணி முடிந்து, தான் தங்கி இருக்கும் குடிசைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, உணவு தேடி வந்த யானை ஒன்று, எல்லப்பாவை துரத்தியது. கீழே விழுந்த அவரை மிதித்து கொன்றது.
இதை பார்த்த அங்கிருந்தவர்கள் கூச்சலிட்டனர். கோபம் குறையாத யானை, எல்லப்பா தங்கியிருந்த குடிசையையும் சேதப்படுத்தி விட்டு சென்றது.
தகவல் அறிந்த வனத்துறையினர் மற்றும் போலீசார் அங்கு வந்தனர். எல்லப்பாவை உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கிராமத்தினர் கூறியதாவது:
இச்சம்பவங்களை பார்த்தால், மலைநாடு மக்களின் உயிருக்கு மதிப்பில்லை என்றே தோன்றுகிறது.
சில நாட்களுக்கு முன்னர் தான், இதே இடத்தில் ஷிகாரிபுராவை சேர்ந்தவர் யானை மிதித்து கொல்லப்பட்டார்.
அவரின,் 90 சதவீத உடல் சிதைந்திருந்தது. அப்போது வந்த வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, இனி இதுபோன்று நடக்காது.
தடுப்புகள் அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தனர். ஆனால், இன்று மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு, 10 முதல் 20 லட்சம் ரூபாய் வரை வழங்கி விட்டு, அரசு அமைதியாகி விடுகிறது. பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்பதில் அவர்கள் அக்கறை காட்டுவதில்லை.
இறந்தவரின் உடலை இங்குள்ள பாலேஹொன்னுார் மருத்துவமனைக்கு அனுப்பாமல், ஷிவமொக்காவுக்கு அனுப்பி உள்ளனர். ஏன் என்று தெரியவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

