இந்தியாவை பற்றி யாராவது தவறாக பேசினால் உலகமே கேள்வி கேட்கிறது: ராஜ்நாத் சிங
இந்தியாவை பற்றி யாராவது தவறாக பேசினால் உலகமே கேள்வி கேட்கிறது: ராஜ்நாத் சிங
UPDATED : நவ 26, 2026 12:00 AM
ADDED : நவ 25, 2026 11:44 PM

கலபுரகி: இந்தியாவை பற்றி யாராவது தவறாக பேசினால், உலகம் முழுதும் கேள்வி கேட்கிறது என்று, மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
‘ஜனநாயகத்தை காப்போம், அராஜகத்தை ஒழிப்போம்’ என்ற முழக்கத்தின் கீழ், கலபுரகியில் பா.ஜ., சார்பில் நேற்று பேரணி நடந்தது. மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று பேரணியை துவக்கி வைத்து பேசியதாவது:
காங்கிரஸ் கட்சி நாட்டின் அரசியலமைப்பு நிறுவனங்களை அவமதிக்கிறது. ஆனால் பா.ஜ., அந்த நிறுவனங்களை காப்பாற்ற உறுதியெடுத்துள்ளது. அரசியல் உள்நோக்கத்துடன் காங்கிரஸ் செயல்படுகிறது. ஜனநாயகத்தை பாதுகாக்கும் பொறுப்பு நாட்டு மக்களிடம் உள்ளது. ஜனநாயகம் மூலம் தான் மக்கள் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். ஆனால் காங்கிரஸ் பார்வை அதிகாரம் மீது உள்ளது. அதிகாரத்திற்காக, ஜனநாயகத்தை வீழ்த்த பார்க்கின்றனர்.
அவசர நிலை அமல்படுத்தியது; சீக்கியர்கள் படுகொலை; அரசியலமைப்பு நிறுவனங்கள் செயல்பாடுகளை சீர்குலைப்பது என்று காங்கிரஸ் மூன்று பெரிய தவறுகளை செய்துள்ளது. தேர்தலில் தோல்வி அடைவதால் தேர்தல் ஆணையம் மீது அவர்கள் பழி சுமத்துகின்றனர். அரசியலமைப்பு பலவீனமானது அல்ல என்பதை ராகுல் புரிந்து கொள்ள வேண்டும். மக்களை ஏமாற்றி யாரும் ஆட்சி அமைக்க முடியாது.
இந்திய மக்களின் நாடி, நரம்பில் சுதந்திர ரத்தம் ஓடுகிறது. நாட்டை அழிக்க யார் நினைத்தாலும் அவர்களை தண்டிப்போம். காங்கிரஸ் கட்சியால் தான் வெளிநாட்டினர் நம் நாட்டிலேயே நம் நாட்டிற்கு எதிராக பேசுகின்றனர். காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது, சர்வதேச அளவில் நமது நாட்டை பற்றி தவறான பேசினாலும், அது தீவிரமாக எடுத்து கொள்ளப்படவில்லை. ஆனால் இப்போது இந்தியாவை பற்றி யாராவது தவறாக பேசினால், உலகம் முழுதும் கேள்வி கேட்கிறது. பிரதமர் மோடி நாட்டிற்காக உழைத்து, மக்கள் நம்பிக்கையை பெற்று உள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார்.
