/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ரமேஷ் ஜார்கிஹோளியுடன் யோகேஸ்வர் திடீர் சந்திப்பு
/
ரமேஷ் ஜார்கிஹோளியுடன் யோகேஸ்வர் திடீர் சந்திப்பு
ADDED : செப் 23, 2025 11:39 PM

ஜெர்மனிக்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில், பா.ஜ., - எம்.எல்.ஏ., ரமேஷ் ஜார்கிஹோளியை, காங்கிரஸ் எம்.எல்.ஏ., யோகேஸ்வர் திடீரென சந்தித்துப் பேசி உள்ளார்.
ராம்நகரின் சென்னப்பட்டணா காங்கிரஸ் எம்.எல்.ஏ., யோகேஸ்வர். இவர் முன்பு பா.ஜ.,வில் இருந்தார். கடந்த ஆண்டு சென்னப்பட்டணா தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில், பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி வேட்பாளராக போட்டியிட, 'சீட்' கிடைக்காததால் காங்கிரசில் இணைந்து வெற்றி பெற்றார். தேர்தல் பிரசாரத்தின் போதும், தேர்தலுக்கு பின்பும் துணை முதல்வர் சிவகுமாரும், அவரது தம்பி சுரேஷும், யோகேஸ்வருக்கு ஆதரவாக இருந்தனர். எங்கு சென்றாலும், அவரையும் அழைத்துச் சென்றனர்.
ஆனால் தேர்தல் முடிந்து சில நாட்களிலேயே, யோகேஸ்வருடன் நெருக்கம் காட்டுவதை, அண்ணனும், தம்பியும் குறைத்துக் கொண்டனர். தேர்தலுக்கு முன்பு அதிகம் பேசிய யோகேஸ்வரும், தற்போது அமைதியாகி விட்டார்.
இந்நிலையில், ஜெர்மன் நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ள யோகேஸ்வர், அங்கு ஏற்கனவே சென்றுள்ள பா.ஜ., - எம்.எல்.ஏ., ரமேஷ் ஜார்கிஹோளியை சந்தித்தார். இருவரும் அரைமணி நேரம் உரையாடி உள்ளனர். அவர்கள் இருவரும் சந்தித்தபோது எடுத்த படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளனர்.
இருவரின் திடீர் சந்திப்புக்கான காரணம் தெரியவில்லை.
மூன்று மாதங்களுக்கு முன்பு, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, பெங்களூரு வந்திருந்தார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது யாரும் எதிர்பாராத வகையில், யோகேஸ்வரின் முதல் மனைவியும், அவரது மகளும், ரன்தீப் சுர்ஜேவாலாவை சந்தித்து, யோகேஸ்வர் மீது புகார் தெரிவித்தனர். அவர்களுக்கு ஆதரவாக மேலிட பொறுப்பாளர் பேசியதாக கூறப்படுகிறது.
குடும்ப பிரச்னையில் தலையிட்டதால், காங்கிரஸ் மீது யோகேஸ்வர் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் அவர் ரமேஷ் ஜார்கிஹோளியை சந்தித்து இருப்பது, மீண்டும் கட்சி மாற போகிறாரா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.
கடந்த 2018ல் காங்கிரஸ் - ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்கள் 17 பேர், பா.ஜ.,வுக்கு சென்றதால் ஆட்சி கவிழ்ந்தது. அவர்களை பா.ஜ., பக்கம் இழுத்து வருவதில் யோகேஸ்வர் முக்கிய பங்காற்றியது குறிப்பிடத்தக்கது. சிவகுமாரும், ரமேஷ் ஜார்கிஹோளியும் அரசியல் எதிரிகள் என்பதும் கவனிக்கத்தக்கது.
- நமது நிருபர் -