பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு மே.வங்க வாலிபர் கர்நாடகாவில் கைது
பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு மே.வங்க வாலிபர் கர்நாடகாவில் கைது
UPDATED : அக் 19, 2026 12:00 AM
ADDED : அக் 18, 2026 09:54 PM

கலபுரகி: கர்நாடகாவில், ‘லஷ்கர் – இ – தொய்பா’ பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாகக் கூறி, மேற்கு வங்க வாலிபர் கைது செய்யப்பட்டார்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மும்தாஜ் உல் மாலிக், 26, என்பவர், கர்நாடகாவின் கலபுரகி டவுன் சராப் பஜாரில் உள்ள நகைக்கடை ஒன்றில் இரு ஆண்டுகளாக வேலை செய்கிறார். அப்பகுதியில் உள்ள வீட்டில் வாடகைக்கு வசித்தார்.
இவர், சமூக வலைதளங்கள் மூலம், பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் அமைப்புக்கு நாட்டின் ரகசியங்களை பகிர்ந்துள்ளார். இது பற்றி உளவு துறையினருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள், கர்நாடக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதன்படி, மும்தாஜ் உல் மாலிக்கை கர்நாடக போலீசார் நேற்று கைது செய்தனர். அவரது மொபைல் போனில் உள்ள தகவல்கள், ‘வாட்ஸாப்’ உரையாடல்களை ஆய்வு செய்கின்றனர். அழிக்கப்பட்ட தகவல்களை மீட்டெடுக்க, மொபைல் போன் தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்து, மாநில காங்., அரசின் உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே கூறியதாவது:
என் சொந்த ஊரான கலபுரகியில், பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த, மேற்கு வங்க வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுபற்றி உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளிடம் தகவல் பெற்று உள்ளேன். இன்னொரு வாலிபரிடமும் விசாரணை நடந்தது. அவருக்கு எந்த தொடர்பும் இல்லாததால் விடுவிக்கப்பட்டார்.
மற்ற மாநிலங்களில் இருந்து கர்நாடகாவுக்கு வந்து வேலை செய்வோரை நாம் தடுக்க முடியாது. இங்கு வேலை செய்வது அவர்களின் அடிப்படை உரிமை.
ஆனாலும் வெளிமாநிலங்களை சேர்ந்தோரை வேலைக்கு நியமிக்கும் முன்பு, அவர்களின் பின்புலத்தையும், சம்பந்தப்பட்டவர்கள் சரிபார்க்க வேண்டும்.
தசரா பண்டிகை முடிந்ததும் வெளிமாநிலங்களை சேர்ந்தோரை வேலைக்கு சேர்ப்பது தொடர்பாக நிலையான வழிகாட்டுதல் வெளியிடப்படும்.
இவ்வாறு கூறினார்.
பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக, கடந்த மாதம் உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த முகமது சமீர் என்பவர், கலபுரகியில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
