தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பீடி தொழிலாளர்களுக்காக குரல் கொடுக்கும் ஜபீனா கானம்

 பீடி தொழிலாளர்களுக்காக குரல் கொடுக்கும் ஜபீனா கானம்

 பீடி தொழிலாளர்களுக்காக குரல் கொடுக்கும் ஜபீனா கானம்


ADDED : மார் 08, 2026 05:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 08, 2026 05:33 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இன்றைய காலகட்டத்தில், மற்றவருக்கு தொண்டு செய்யும் மனப்பான்மை உள்ளவர்கள் மிகவும் குறைவு. ஏழ்மையிலும் மற்றவரின் நலனுக்காக குரல் கொடுக்கிறார் பெண் ஒருவர்.

தாவணகெரே மாவட்டம் மெஹபூப் நகரில் வசிப்பவர் ஜபீனா கானம். ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். இவரது தந்தை ஆட்டோ ஓட்டுகிறார். குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் பீடி சுற்றி பிழைப்பு நடத்துகின்றனர். பீடி சுற்றினால் மட்டுமே, இவர்களின் குடும்பத்தினர் உணவருந்தும் நிலை உள்ளது.

பீடி சுற்றும் தொழிலாளர்களை, பீடி தயாரிப்பு நிறுவனங்களும், ஒப்பந்ததாரர்களும் பல வகையிலும் கொடுமைப்படுத்தினர். குறைவான கூலி கொடுத்தனர். அதிகமாக வேலை வாங்கினர். தானும் ஒரு பீடி தொழிலாளி என்பதால், அவர்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை ஜபீனா கானம் நேரில் கண்டார்.

அவர்களுக்காக குரல் கொடுக்க துவங்கினார். 'நிழல்' என்ற பெயரில், பீடி தொழிலாளர்கள் யூனியன் அமைத்தார். அவர்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை எதிர்த்து போராடவும் துவங்கினார்.

பீடி தொழிலாளர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய, குறைந்தபட்ச சலுகைகளை கிடைக்கச் செய்தார். 150 ரூபாயாக இருந்த தினக்கூலியை, 240 ரூபாயாக உயர வைத்தார். ஜபீனா கானம், யூனியன் ஆரம்பித்த போது, 30 பெண்கள் அவருக்கு ஆதரவாக நின்றனர். இப்போது அவரது யூனியனில், 2,500 பெண்கள் உள்ளனர். இப்பகுதியில் 7,000 பெண் தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களையும் சென்றடைய திட்டமிட்டுள்ளார் ஜபீனா.

இதுகுறித்து, ஜபீனா கானம் கூறியதாவது:

நானும் பீடி சுற்றும் குடும்பத்தில் இருந்து வந்தவள் தான். என் தாயார், அக்கா மற்றும் நானும் பீடி சுற்றினோம். பீடி தொழிலாளர்கள் படும் கஷ்டத்தை கண்டு, அவர்களுக்காக யூனியன் அமைத்து போராடுகிறேன்.

பீடி தொழிலாளர்கள் மற்றும் பீடி நிறுவனங்கள் இடையே பாலமாக செயல்படுகிறேன். என் ஒருத்தியால் மட்டுமே, மாற்றங்கள் நடக்கவில்லை.

அனைத்து தொழிலாளர்களின் ஒத்துழைப்புடன் தான், என்னால் மாற்றங்களை கொண்டு வர முடிந்தது.

தொழிலாளர்கள் பீடி சுற்றி, வாழ்க்கை நடத்துகின்றனர். இந்த வேலை இல்லையென்றால், அவர்கள் பிழைப்பது கஷ்டம். அரசு நிர்ணயத்துள்ள தினக்கூலியை விட, சிலர் குறைவான கூலி கொடுப்பதால், நாங்கள் போராட்டத்தை துவக்கியுள்ளோம். எங்கு அநியாயம் நடந்தாலும், நாங்கள் தட்டி கேட்போம்.

மாநில அரசு பீடி தொழிலாளர்களின் பிரச்னைகளையும் கவனிக்க வேண்டும். கட்டட தொழிலாளர்களின் நலனுக்காக ஆணையம் இருப்பதை போன்று, பீடி தொழிலாளர்களின் நலனுக்காக ஆணையம் அமைக்க வேண்டும். அரசு தன் விருப்பம் போன்று, ஊதியம் நிர்ணயிக்க கூடாது. 150 ரூபாய் ஊதியத்தில், குடும்பம் நடத்த முடியாது. அவர்களின் வாழ்க்கையை மனதில் கொண்டு, கூலி நிர்ணயிக்க வேண்டும். மாநில அரசு புகையிலை பொருட்களை தடை செய்தால், எங்களுக்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பீடி தொழிலாளி சப்ரீன தாஜ் கூறியதாவது:

யூனியனில் சேர்ந்த பின்னரே, எங்களுக்கு கேள்வி எழுப்பும் தைரியம் வந்தது. எங்கு அநீதி நடந்தாலும், நாங்கள் அங்கு சென்று கேள்வி எழுப்புகிறோம். நான், 11 வயது சிறுமியாக இருந்த போது, எட்டு ரூபாய் கூலியில், பீடி சுற்றும் பணிக்கு வந்தேன். இப்போது, 240 ரூபாய் கிடைக்கிறது.

யூனியனில் சேர்ந்து, தொழிலாளர் நலத்துறையில் வேண்டுகோள் விடுத்து, கூலியை அதிகமாக்கினோம். எங்களுக்கு ஜபீனா கானம், முதுகெலும்பாக நிற்கிறார். எங்களுக்காக பல போராட்டங்களை நடத்தியுள்ளார். பீடி தொழிலாளர்களின் பிரச்னைகள் மட்டுமின்றி, அரசு மருத்துவமனைகள், அலுவலகங்கள், பள்ளிகளில் லஞ்சம் கேட்டால், அங்கு சென்று போராட்டம் நடத்துகிறோம். விவசாயிகளுக்கு அநியாயம் நடந்தாலும், நாங்கள் கண்டிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -:

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us