/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
ரூ.9 லட்சம் கோடியை தாண்டிய வங்கிகளின் கடன்
/
ரூ.9 லட்சம் கோடியை தாண்டிய வங்கிகளின் கடன்
ADDED : ஆக 21, 2024 12:49 AM

புதுடில்லி: கடந்த ஜூலையில்,வங்கிகள் திரட்டிய கடன் தொகை, முதல்முறையாக 9 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளதாக ரிசர்வ் வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.
இது குறித்து, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிவித்துள்ளதாவது: பணவீக்கத்தை சமாளிப்பதற்காக, மாற்று முதலீடுகள் மீது மக்கள் அதிக கவனம் செலுத்துவதால், வங்கிகளில் டிபாசிட் செய்வது குறைந்து வருகிறது. மறுபுறம், வங்கி கடனுக்கான தேவை அதிகரித்து வருகிறது. இதனால், கடன் மற்றும் டிபாசிட்களுக்கு இடையேயான இடைவெளி அதிகரித்து வருகிறது.
இந்த இடைவெளியை குறைக்க வங்கிகள் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதன்படி, கடந்த ஏப்.5ல், 7.75 லட்சம் கோடி ரூபாய் கடன் தொகை திரட்டியிருந்த நிலையில், ஜூலை 26ம் தேதி நிலவரப்படி, பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள், கிராமப்புற வங்கிகள், சிறு கடன் வங்கிகள் உள்ளிட்டவை சேர்த்து, 9.32 லட்சம் கோடி ரூபாயை சந்தையில் கடனாக பெற்றுள்ளன. இது ஏப்ரல் 5ம் தேதியுடன் ஒப்பிடுகையில், 20 சதவீதம் அதிகமாகும்.
முந்தைய ஆண்டு இதே காலத்தோடு ஒப்பிடுகையில், 19 சதவீதம் அதிகமாகும். கடந்தாண்டு 7.84 லட்சம் கோடி ரூபாய் கடனாக பதிவாகி இருந்தது. ஒட்டுமொத்தமாக, அனைத்து பட்டியலிடப்பட்ட வங்கிகள் பெற்ற கடன், 9.37 லட்சம் கோடி ரூபாயாக பதிவாகி உள்ளது. இது, முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில், 18.7 சதவீதம் அதிகரித்து உள்ளது. மேலும், இதில் உள்கட்டமைப்பு பத்திரம், வைப்புச் சான்றிதழ் பத்திரம் ஆகியவை வாயிலாக திரட்டிய நிதி அடங்காது.
2023--24ம் நிதியாண்டில், வங்கிகளின் டிபாசிட் தொகை 23 லட்சம் கோடி ரூபாயாகவும், அதே சமயம், கடன் திரட்டல் 22 லட்சம் கோடி ரூபாயாக பதிவாகி இருந்தது. டிபாசிட்டை விட, கடன் திரட்டல் 75 முதல் 80 சதவீதம் அதிகமாக இருப்பதால், இதன் இடைவெளியை நிரப்ப, சந்தையில் கடன் திரட்டும் நிலைக்கு வங்கிகள் தள்ளப்படுகின்றன. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.