/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
வங்கி கடன் பெறுவதில் மாற்றங்கள் அக்டோபரிலிருந்து புதிய விதிமுறைகள்
/
வங்கி கடன் பெறுவதில் மாற்றங்கள் அக்டோபரிலிருந்து புதிய விதிமுறைகள்
வங்கி கடன் பெறுவதில் மாற்றங்கள் அக்டோபரிலிருந்து புதிய விதிமுறைகள்
வங்கி கடன் பெறுவதில் மாற்றங்கள் அக்டோபரிலிருந்து புதிய விதிமுறைகள்
ADDED : ஏப் 18, 2024 12:22 AM

புதுடில்லி: வரும் அக்டோபர் முதல், வங்கிக் கடன் பெறும் வாடிக்கையாளர்களுக்கு, வங்கிகள் வழங்க வேண்டிய தகவல்கள் குறித்து, ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதன்படி, வரும் அக்டோபர் முதல் சில்லரை மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில் கடன் பெறுவோருக்கு, கடன் குறித்த முக்கிய தகவல்கள் அடங்கிய அறிக்கையை வங்கிகளும், வங்கி சாரா நிதி நிறுவனங்களும் வழங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
கடனுக்கான வட்டி விகிதங்கள், கூடுதல் கட்டணங்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்கள் குறித்தும், இந்த முக்கிய தகவல் அறிக்கையில் இடம் பெற்றிருக்க வேண்டும்.
இதுதொடர்பாக, ரிசர்வ் வங்கி மேலும் தெரிவித்துள்ளதாவது: கடன் குறித்த தகவல்களில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும்; கடன் பெறுவோர் தகவலறிந்து முடிவுகளை எடுக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடன் குறித்த இந்த முக்கிய தகவல்கள் அடங்கிய அறிக்கையை அனைத்து வங்கிகளும் ஒருமித்த வடிவத்திலேயே வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள், தகவல்களை எளிதாக புரிந்து கொள்ளும் நோக்கில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வங்கியில் பல ஆண்டுகளாக வாடிக்கையாளராக உள்ளவர்களாக இருந்தாலும், அக்டோபரிலிருந்து அவர்கள் புதிதாக கடனுக்காக விண்ணப்பிக்கும்பட்சத்தில், அவர்களுக்கும் முக்கிய தகவல் அறிக்கையை வழங்க வேண்டும். காப்பீடு கட்டணம் போன்று வாடிக்கையாளரிடமிருந்து வசூலிக்கப்படும் எந்தவொரு கட்டணத்திற்கும், குறிப்பிட்ட காலத்திற்குள் அது தொடர்புடைய ரசீதுகள் மற்றும் ஆவணங்களை அவர்களிடம் வழங்க வேண்டும். கடன் நிலுவையிலுள்ள காலகட்டத்தில், முக்கிய தகவல்கள் அடங்கிய அறிக்கையில் குறிப்பிடப்படாத எந்தவொரு கட்டணத்தையும் வாடிக்கையாளரின் ஒப்புதல் இன்றி வசூலிக்கக் கூடாது. எனினும், கிரெடிட் கார்டு தொடர்பான கட்டணங்களுக்கு, இந்த விதிமுறைகளிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடன் குறித்த முக்கிய தகவல்கள் அடங்கிய அறிக்கையில் குறிப்பிடப்படாத எந்தவொரு கட்டணத்தையும், வாடிக்கையாளரின் ஒப்புதல் இன்றி வசூலிக்கக் கூடாது

