/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
உங்களை கடன் சுமையில் ஆழ்த்தும் நிதி பழக்கங்கள்
/
உங்களை கடன் சுமையில் ஆழ்த்தும் நிதி பழக்கங்கள்
ADDED : மார் 10, 2025 01:17 PM
நிதி நிர்வாகம் என்பது தேவையான திறனாகக் கருதப்பட்டாலும், பெரும்பாலானோர் போதிய நிதிக்கல்வி விழிப்புணர்வு இல்லாமலே இருக்கின்றனர். சேமிப்பின் அடிப்படை, முதலீடு வகைகள் போன்ற அடிப்படை அம்சங்கள் தொடர்பான விழிப்புணர்வு இல்லாததால், வரைமுறையின்றி செலவு செய்து கடன் சுமையில் சிக்கிக் கொள்ளும் ஆபத்து இருக்கிறது. அதிலும் குறிப்பாக, அண்மையில் இந்தியர்களின் கடன் சுமை அதிகரித்து வருவதாக கருதப்படும் நிலை இருக்கிறது. இந்த பின்னணியில், கடன் சுமையில் ஆழ்த்தக்கூடிய நிதி பழக்கங்களை அறிந்து, அவற்றை தவிர்ப்பது அவசியமாகிறது.
டிஜிட்டல் பரிவர்த்தனை: கிரெடிட் கார்டு மிகை பயன்பாடு நிச்சயம் கடன் சுமையில் ஆழ்த்தலாம். எந்தவித திட்டமிடலும் இல்லாமல் தினசரி பயன்பாட்டிற்கு கார்டை தேய்த்து பணம் செலுத்துவது பாதிப்பை உண்டாக்கும். அதே போல், டிஜிட்டல் பரிவர்த்தனையிலும் கவனம் செலுத்த வேண்டும்.
பட்ஜெட் முக்கியம்: வருமானத்தை மீறி செலவு செய்யும் போது நிச்சயம் கடன் சுமை ஏற்படும். முறையான பட்ஜெட் இல்லாமல் இஷ்டம் போல செலவு செய்வதே இதற்கு காரணம். எனவே, மாதாந்திர பட்ஜெட் அவசியம் என்பதோடு, செலவு செய்யும் பணம் எங்கே போகிறது என்பதை கண்காணித்து செயல்பட வேண்டும்.
சிறிய செலவுகள்: தினசரி மேற்கொள்ளும் சிறிய செலவுகள் கவனத்தில் வராமல் போகலாம். ஆனால், ஒட்டு மொத்த நோக்கில் இந்த செலவுகள் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தும். தினசரி செலவுகளை ஏதேனும் ஒரு விதத்தில் குறித்து வைப்பது நல்லது. செலவுகளை கட்டுப்படுத்தவும் இந்த செயல் உதவும்.
நிதிக் கல்வி: வருமானம் ஈட்டுவது மட்டும் போதாது. சேமிப்பது, முதலீடு செய்வது உள்ளிட்ட நிதி செயல்பாடுகளின் அடிப்படை அம்சங்களை அறிந்திருக்க வேண்டும். போதிய நிதிக் கல்வி இல்லாதது, மோசமான நிதி முடிவுகளை மேற்கொள்ள வைக்கும். நீண்ட கால நோக்கில் இதுவே கடன் வலையில் சிக்க வைக்கும்.
அவசர கால நிதி: தேவைக்காக கடன் வாங்குவதோடு, எதிர்பாராத தேவைகளுக்காக கடன் வாங்க நேரலாம். இத்தகைய எதிர்பாராத நெருக்கடிகளை சமாளிக்கவே அவசர கால நிதி தேவை என வலியுறுத்தப்படுகிறது. இந்த வகை நிதி, திட்டமிடலில் முக்கிய அம்சமாகவும் அமைகிறது.