/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
நிச்சயமற்ற வருமான சூழலை சமாளிக்க நிதி திட்டமிடல்
/
நிச்சயமற்ற வருமான சூழலை சமாளிக்க நிதி திட்டமிடல்
ADDED : செப் 16, 2024 01:21 AM

பொதுவாக நிதி திட்டமிடல் என்று வரும் போது, வருமானத்திற்கு ஏற்ப செலவு செய்வதும், இலக்குகளை தீர்மானித்து முதலீடு செய்வதும் முக்கியமாக அமைகிறது. நிதி பயணத்தில் முன்னேறிச்செல்ல திட்டமிடல் உதவும் என்றாலும், சீரான மாத வருமானம் இல்லாதவர்களுக்கு நிதி திட்டமிடலை பின்பற்றுவது சிக்கலாகலாம்.
சொந்தமாக தொழில் செய்பவர்கள், பிரிலான்சர்கள் உள்ளிட்ட நிச்சயமற்ற வருமானம் கொண்டவர்கள், ஏற்ற இறக்கமான வருமான சூழலை சமாளிக்க பின்பற்ற வேண்டிய நிதி திட்டமிடல் உத்திகளை பார்க்கலாம்.
மாறும் வருமானம்:
நிச்சயமற்ற வருமானம் கொண்டவர்களுக்கு மாதந்தோறும் வருமானம் ஒரே மாதிரி இருக்காது. சில மாதங்கள் அதிக வருமானம் வந்தால், சில மாதங்கள் குறைவாக இருக்கலாம். எனவே, மாதாந்திர செலவுகள், சராசரி வருமானத்தை விட அதிகமாக இருக்கும். இது பண நெருக்கடியையும், மன நெருக்கடியையும் உண்டாக்கலாம்.
சீரான வருமானம்:
நிச்சயமற்ற வருமான சூழல் இருந்தாலும், அவற்றில் நிலையானவற்றை கொண்டு குறைந்தபட்ச சீரான வருமானத்தை உருவாக்கி கொள்வது நல்லது. இந்த வருமானத்தை உறுதி செய்யும் தொழில் மற்றும் வர்த்தக வாய்ப்புகளில் கவனம் செலுத்த வேண்டும். விசுவாசமான வாடிக்கையாளர்களை உருவாக்கி கொள்ள வேண்டும்.
உபரி தொகை:
ஏற்ற இறக்கமான வருமானத்தில் செலவுகள் சமாளிக்கும் வழி, வருமானம் அதிகம் உள்ள மாதங்களில், உபரி தொகையை சேமித்து வைப்பதாகும். இந்த தொகை வருமானம் குறைந்த மாதங்களில் செலவுகளை சமாளிக்க கைகொடுக்கும். எனவே அதிக வருமானம் வரும் போது அதிகம், செலவு செய்யக்கூடாது.
மாற்று வழி:
அதே நேரத்தில் மாற்று வருமான வழி இருப்பதும் அவசியம். மிகை வருமானம் வரும் மாதங்களில் சேமிக்கும் உபரி தொகையில் ஒரு பகுதியை வருமானம்தரக்கூடிய நிதி சாதனங்களில் முதலீடு செய்ய வேண்டும். பொருத்தமான மியூச்சுவல் பண்ட் திட்டங்கள், வைப்பு நிதிஉள்ளிட்ட முதலீடு கைகொடுக்கும்.
கூடுதல் வருமானம்:
சீரான வருமானம் அவசியம் என்பதால், தேவை என்றால் பகுதிநேர வேலை அல்லது
ஆலோசனை வழங்கும் சேவை அளித்தல் போன்ற வாய்ப்புகளை நாடலாம். இதன் மூலம் கிடைக்கும் வருமானம் சீரானதாக அமைவதோடு, வர்த்தகத்தில் முழு கவனம் செலுத்தவும்
இது உதவும்.

