/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி கற்றுத்தரும் நிதி பாடங்கள்!
/
ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி கற்றுத்தரும் நிதி பாடங்கள்!
ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி கற்றுத்தரும் நிதி பாடங்கள்!
ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி கற்றுத்தரும் நிதி பாடங்கள்!
ADDED : மே 06, 2024 12:33 AM

ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியின் அண்மை பதிப்பு வழக்கம் போலவே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிரடி ஆட்டங்கள், பரபரப்பான முடிவுகள், கவனத்தை ஈர்க்கும் புதிய திறமையாளர்கள் என, இந்த ஆண்டு போட்டிகள் உச்சகட்ட ஆர்வத்தை எட்டியுள்ளன.
ஐ.பி.எல்., போட்டி தொடர்பான விவாதங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், நிதி உலக செயல்பாடுகளுடனும் இதன் நெருங்கிய தொடர்பை கவனிக்கலாம். அந்த வகையில், ஐ.பி.எல்., போட்டிகள் முதலீட்டாளர்களுக்கு முக்கிய நிதி பாடங்களை வலியுறுத்துவதாகவும் அமைகிறது. அந்த பாடங்களை பார்க்கலாம்:
ஆரம்ப முதலீடு:
இந்த போட்டித்தொடரின் முக்கிய அம்சங்களில் ஒன்று பவர்பிளே என்று கூறப்படும், ஆரம்ப ஓவர்களில் அதிரடியாக ஆடும் அணிகள் ஆதிக்கம் செலுத்துவது தான். முதலீட்டு உலகிலும், ஆரம்ப காலத்தில் இருந்து முதலீடு செய்வதே தாரக மந்திரமாக அமைகிறது. பவர்பிளே சாதகம் போலவே, ஆரம்ப முதலீடு கூடுதல் பலன் அளிக்கும்.
ஆய்வு தேவை:
முதலீடு செய்யும் முன் ஆய்வு முக்கியம். ஐ.பி.எல்., போட்டிகளில் எந்த கேப்டனும், போட்டிகளின் போக்கு, கள நிலவரம், எதிரணி பற்றி ஆய்வு செய்யாமல், தனது உத்திகளை வகுப்பதில்லை. முதலீட்டாளர்களும், சந்தை நிலவரம், பொருளாதார சூழல், நிதி இலக்கு உள்ளிட்ட அம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
விரிவாக்கம் தேவை:
வலுவான பேட்டிங் கொண்ட அணி, பந்துவீச்சிலும், பீல்டிங்கிலும் பலவீனமாக இருந்தால், வெற்றி பெற முடியாது. எல்லாத்துறைகளிலும் சமமான கவனம் தேவை. முதலீட்டு உலகிலும், விரிவாக வலியுறுத்தப்படுகிறது. பல்வேறு திறன் கொண்ட வீரர்களைப்போல, பலவகை பலன் தரக்கூடிய நிதி சாதனங்கள் அவசியம்.
தொடர் செயல்பாடு:
ஒரு போட்டியில் நன்றாக ஆடிவிட்டு அடுத்த ஆட்டங்களில் சொதப்புவதில் பயனில்லை. தொடர்ந்து சீராக ஆடுவது முக்கியம். அதே போலவே, முதலீடு உலகிலும் சீரான செயல்பாடு அவசியம். எஸ்.ஐ.பி., போன்ற முதலீடு உத்திகள் இதற்கு கைகொடுக்கும்.
அவசரகால நிதி:
ஒரு மோசமான ஓவர் போட்டியின் போக்கை மாற்றிவிடலாம். அது போலவே, எதிர்பாராத நெருக்கடிகள் நிதி உலகில் பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே, இத்தகைய நெருக்கடிகளை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். அவசரகால நிதி இந்த நோக்கில் தான் வலியுறுத்தப்படுகிறது.