ADDED : மார் 10, 2025 11:02 PM

218 கோடி ரூபாயை இந்திய சரக்கு போக்குவரத்து துறையில் நடப்பாண்டு முதலீடு செய்ய உள்ளதாக, துபாயைச் சேர்ந்த விமான சரக்கு போக்குவரத்து நிறுவனமான, 'சாலிட்ஏர்' தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்சிலிருந்து ஆறு மணி நேர விமான பயண துார இடங்களுக்கு சரக்கு போக்குவரத்து மேற்கொள்ள திட்டமிட்டு உள்ள இந்நிறுவனம், ஆரம்பகட்டமாக டில்லி, மும்பை, பெங்களூரு ஆகிய நகரங்களில் கவனம் செலுத்த உள்ளது.
60,000 கோடி ரூபாய்க்கு ஹோலி பண்டிகை வணிகம் நடைபெறும் என அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு கணித்துள்ளது. இது கடந்தாண்டின் 50,000 கோடி ரூபாயுடன் ஒப்பிடுகையில் 20 சதவீதம் அதிகமாகும்.
டில்லியில் மட்டும் 8,000 கோடி ரூபாய்க்கு வணிகம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நுகர்வோரின் செலவழிப்பு திறன் அதிகரித்து வருவதையடுத்து, ஹோலி கொண்டாடப்படும் மாநிலங்களில் விற்பனை அதிகரிக்கும் என வணிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
40 கோடி ரூபாய் இழப்பு, சைபர் குற்றங்களால் நடப்பு நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில் 13,384 'சைபர்' குற்றங்கள் நடைபெற்றுள்ளதாகவும் தெரிவித்துஉள்ளது.
நாட்டில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதற்கேற்ப சைபர் குற்றங்களும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. கடந்த 11 ஆண்டுகளில், இதனால், மொத்தம் 733 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

