/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
'பொதுத்துறை வங்கிகளின் வாரா கடன் குறைந்துள்ளது'
/
'பொதுத்துறை வங்கிகளின் வாரா கடன் குறைந்துள்ளது'
UPDATED : மார் 22, 2024 12:28 PM
ADDED : மார் 22, 2024 12:28 AM

புதுடில்லி:இந்தியாவிலுள்ள அனைத்து பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன், கடந்தாண்டு ஜூலை முதல் டிசம்பர் வரையிலான ஆறு மாத காலகட்டத்தில் குறைந்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், தனியார் வங்கிகளை பொறுத்தவரை, 67 சதவீத வங்கிகளில் மட்டுமே வாராக் கடன் மதிப்பு குறைந்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிகள் தொடர்பான எப்.ஐ.சி.சி.ஐ., - ஐ.பி.ஏ., அமைப்புகளின் 18வது கணக்கெடுப்பு நேற்று வெளியிடப்பட்டது. கடந்தாண்டு ஜூலை முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில், நாட்டிலுள்ள 23 பொதுத்துறை, தனியார் மற்றும் வெளிநாட்டு வங்கிகளில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த கணக்கெடுப்பில் பங்கேற்றுள்ள வங்கிகள், சொத்துக்களின் அடிப்படையில், நாட்டிலுள்ள 77 சதவீத வங்கிகளை உள்ளடக்கியுள்ளன.
இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கணக்கெடுப்பில் பங்கேற்ற வங்கிகளில் 77 சதவீத வங்கிகள், இந்த ஆறு மாதங்களில் தங்கள் வங்கிகளின் வாராக் கடன் சரிந்துள்ளதாக தெரிவித்துள்ளன. 22 சதவீத தனியார் வங்கிகள், தங்களது வாராக் கடன் அதிகரித்துள்ளதாக தெரிவித்தனர். தனியார் வங்கிகளுடன் ஒப்பிடுகையில், பொதுத்துறை வங்கிகள் சிறப்பான சொத்து மதிப்பை வெளிப்படுத்தின.
பாதிக்கும் அதிகமான வங்கிகள், அடுத்த ஆறு மாதங்களில் தங்களது வாராக் கடன் 3.00 முதல் 3.50 சதவீதத்துக்குள் இருக்கும் என்று தெரிவித்தன.
உணவு பதப்படுத்துதல், ஜவுளி மற்றும் கட்டுமானத் துறைகளே தொடர்ந்து அதிக வாராக் கடன்களை கொண்டுள்ளதாக வங்கிகள் தெரிவித்தன.
அடுத்த ஆறு மாதங்களில், உணவு அல்லாத துறைகளின் கடன் வளர்ச்சியை பொறுத்தவரை வங்கிகள் நம்பிக்கையுடனேயே உள்ளன. 41 சதவீத வங்கிகள், இப்பிரிவில் கடன் வளர்ச்சி 12 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்தன.
உள்கட்டமைப்பு, உலோகம், இரும்பு மற்றும் உருக்கு, உணவு பதப்படுத்துதல் போன்ற துறைகளின் நீண்ட கால கடன் தேவைகள் தொடர்ந்து வளர்ச்சி கண்டுள்ளன.
வலுவான முதலீட்டு வளர்ச்சி மற்றும் தொழில் துறை நடவடிக்கைகள் மீண்டெழுந்ததன் காரணமாக, நடப்பு நிதியாண்டில் மற்ற பெரிய பொருளாதாரங்களுடன் ஒப்பிடுகையில், இந்தியாவின் பொருளாதாரத்தின் வளர்ச்சி சிறப்பாகவே உள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் வங்கிகளுடன் ஒப்பிடுகையில், பொதுத்துறை வங்கிகள் சிறப்பான சொத்து மதிப்பை வெளிப்படுத்தி உள்ளன

