/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
'டாப் அப்' கடன் வசதியை நாடுவதில் ஏன் கவனம் தேவை?
/
'டாப் அப்' கடன் வசதியை நாடுவதில் ஏன் கவனம் தேவை?
ADDED : ஆக 19, 2024 12:53 AM

வீட்டுக்கடன் மீது வழங்கப்படும் டாப் அப் கடன், எளிதான வசதியாக அமைந்தாலும் எச்சரிக்கையாக பயன்படுத்தப்பட வேண்டும்.
பலவகை கடன் வசதிகளில் ஒன்றாக வீட்டுக்கடன் மீதான டாப்- அப் கடன் வசதி அமைகிறது. இந்நிலையில், இந்த வகை கடன் வசதி தொடர்பாக அண்மையில் வங்கிகளை ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது கவனத்தை ஈர்த்து உள்ளது.
டாப்- அப் கடன் அதிகரித்திருப்பதை சுட்டிக்காட்டிய ரிசர்வ் வங்கி, வங்கிகள் இது தொடர்பான விதிமுறைகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும் என்றும், இந்த கடன் வசதி முறையாக பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
டாப் அப் கடன் மூலம் பெறப்படும் தொகை, பங்கு முதலீடு உள்ளிட்ட ஊகபேர செயலுக்கு பயன்படுத்தப்படுவதாக சந்தேகிப்பதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.
கூடுதல் கடன்
வீட்டுக் கடனுக்கான தவணையை முறையாக செலுத்தி வரும் வாடிக்கையாளர்களுக்கு, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கூடுதல் கடனாக டாப் அப் கடன் அளிக்க முன்வருகின்றன. இவை, இல்ல சமபங்கு கடன் என்றும் அழைக்கப்படுகின்றன. குறிப்பிட்ட காலத்திற்கு தவணையை செலுத்தி வந்தால், இந்த கடனுக்கான தகுதியை பெறலாம்.
வீட்டின் மதிப்பு மற்றும் நிலுவையில் உள்ள கடன் தொகைக்கு ஏற்ப கூடுதல் கடன் அமைகிறது. வீட்டுக்கடன் மீது வழங்கப்படுவதால் இதற்கான நடைமுறையும் எளிதானது; உடனே கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. வட்டி விகிதமும் மற்ற கடன்களோடு ஒப்பிடும் போது குறைவாக இருக்கலாம்.
பொதுவாக, வங்கிகள் டாப் அப் கடன் வசதியை இல்ல மேம்பாடு அல்லது உள் அலங்கார பணிகளுக்காக வழங்குகிறது. எனினும், இந்த கடன் வசதியை எந்த நோக்கத்திற்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
முறையாக தவணையை செலுத்தும் தகுதி இருந்தால், இந்த கடன் வசதி பயனுள்ளதாக அமையும். அவசரத் தேவைக்காகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். பல்வேறு சாதகமான அம்சங்கள் இருப்பது, இந்த கடன் வசதியை ஈர்ப்புடையதாக தோன்றச் செய்யலாம்.
எனினும், எளிதாக கிடைக்கிறது என்பதற்காக டாப் அப் கடன் வசதியை இஷ்டம் போல பயன்படுத்தக்கூடாது: இதன் நோக்கம் மற்றும் தேவையில் கவனமாக இருக்க வேண்டும். சொந்த வீட்டை மேம்படுத்தும் தேவை ஏற்படும் போது, இந்த கடன் வசதியை நாடலாம்.
அவசர தேவையின் போது, கிரெடிட் கார்டு அல்லது தனிநபர் கடனை விட சாதகமானதாக அமைந்தால் பயன்படுத்தலாம். எனினும், எந்த தேவைக்காக பயன்படுத்தினாலும், திருப்பிச் செலுத்தும் வசதி குறித்து யோசித்து திட்டமிட வேண்டும்.
தவிர்க்க வேண்டும்
மேலும், டாப் அப் கடன் ஒருவரது பட்ஜெட்டை விடகூடுதலாக அமைந்தாலும் சிக்கலாகலாம். அளவுக்கு அதிகமாக கடன் பெறாமல் இருப்பதை உறுதி செய்து கொள்வது அவசியம். இல்லை எனில், மாதத் தவணை செலுத்துவது பிரச்னையாகி கடன் சுமை அதிகரிக்கலாம்; நீண்டகால நோக்கில் வட்டியும் அதிகமாகும்.
எனவே, பங்கு சந்தை முதலீடு போன்றவற்றுக்கு இந்த கடன் வசதியை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். கடன் பெற்று முதலீடு செய்யும் உத்தி, அடிப்படையில் தவறானது. அதே போல நுகர்வு மற்றும் விடுமுறை பயணங்களுக்காகவும் இந்த கடன் வசதியை நாடுவதை தவிர்க்க வேண்டும்.