/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
வங்கிகள் விலக்கி வைத்த வாராக்கடன்; 10 ஆண்டுகளில் ரூ.16.35 லட்சம் கோடி பெருநிறுவனங்கள் பங்கு ரூ.9.27 லட்சம் கோடி

ADDED : மார் 18, 2025 07:08 AM

புதுடில்லி : கடந்த 10 நிதியாண்டுகளில், இந்திய வங்கிகள், மொத்தம் 16.35 லட்சம் கோடி ரூபாய் வாராக் கடனை, தங்கள் லாப நஷ்ட கணக்கில் இருந்து விலக்கியுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பார்லி.,யில் கேட்கப்பட்ட கேள்விக்கு, மத்திய நிதி அமைச்சர் அளித்த பதிலில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக, 2018-19ம் நிதியாண்டில், 2.36 லட்சம் கோடி ரூபாய் அளவிலான வாராக் கடனை வங்கிகள் விலக்கி வைத்த நிலையில், குறைந்தபட்சமாக 2014-15ல் அது 58,786 கோடி ரூபாயாக இருந்தது.
வங்கிகளுக்கான கண்காணிப்பு விதிமுறைகளின் படி, அவற்றின் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் இருந்து, வாராக்கடன்கள் விலக்கி வைக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி ஏற்கனவே விளக்கம் அளித்திருந்தது. அதாவது, நான்கு ஆண்டுகளாக தங்கள் நிதி நிலை அறிக்கையில் காட்டப்படும் வாராக் கடனில், வசூலாகாத கடன்கள், ஐந்தாவது ஆண்டில் இருந்து விலக்கப்படும்.
வாராக்கடன் வசூலிப்பு நடவடிக்கை தொடரும் என்ற போதிலும், வங்கிகளின் நிதி ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய, இருப்பு நிலை குறிப்பில், வாராக்கடன் விலக்கி வைப்பு மேற்கொள்ளப்படுவதாகவும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
வங்கியின் நிதிநிலை அறிக்கையில் இருந்து விலக்கி வைக்கப்படும் வாராக் கடன்கள் தனியாக பராமரிக்கப்பட்டு, கடன் வசூலிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறும் என்றும், இது கடன் தள்ளுபடியல்ல என்றும், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.
வங்கிகளின் நிதிநிலை அறிக்கையில் இருந்து கடந்த 10 ஆண்டுகளில் விலக்கி வைக்கப்பட்ட மொத்த வாராக்கடனான 16.35 லட்சம் கோடி ரூபாயில், பெருநிறுவனங்களின் பங்கு மட்டும் 9.27 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.